பெரு நாட்டில் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தங்களுடைய குழந்தையின் மருத்துவதற்காக கஞ்சாவிலிருந்து எண்ணெயை பெற்றோர்  பிரித்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த பெற்றோரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்பின்னரே Marijuana எனும் கஞ்சாவை மருத்துவத்திற்காக அனுமதிக்கும் மசோதாவை அந் நாட்டு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சட்டமசோதா தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அதிகளவான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவே கன்சர்வேட்டிவ் காங்கிரஸ் கட்சி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனையை சட்டப்பூர்வமாக செய்யலாம்.

இதுதொடர்பான சட்டவிதிகள் 60 நாட்களுக்குள் உருவாக்கப்படும் என ஆளும் கட்சியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சட்டம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பெருவின் அண்டை நாடுகளான சிலி மற்றும் கொலம்பியாவில் ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.