அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் உள்ள 76 வயதுடைய மருதமுத்து பொன்னுசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி வெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இவரை காணவில்லை என அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை குறித்த ஆற்றில் ஒருவரின் சடலம் மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சென்று பார்த்த பொழுது உறவினர்களால் தேடப்பட்டுவந்த முதியலர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்ட பதில் நீதிவான் அவ்விடத்திற்கு வருகை தந்த பின்னர் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதன்பின்னர் பதில் நீதிவானால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், இம் மரணம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.