ஸாஹிரா பழைய மாணவத் தலைவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஸாஹிரா சுப்பர் 16 போட்டிகளின் பிரதான கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு ஹமீத் அல் ஹுசெய்னி தகுதிபெற்றுள்ளது.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு எதிராக ஸாஹிரா மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கிண்ணப் பிரவு முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹுசெய்னி 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஸாஹிரா அணிக்கும் புனித ஆசீர்வாதப்பர் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி கடும் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இப் போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.

இதேவேளை கோப்பை பிரிவு அரை இறுதிப் போட்டி ஒன்றில் புனித சூசையப்பர் அணியை 2 க்கு 0 என மாரிஸ் ஸ்டெல்லா வெற்றிகொண்டது.

மற்றைய அரை இறுதிப் போட்டியில் லும்பிணி அணியை 1 க்கு 0 என வெஸ்லி அணி வெற்றிகொண்டது.

கிண்ணம், கோப்பை, குவளை, கேடயம் ஆகிய பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள் ஸாஹிரா மைதானத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளன.