அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவரான  ஸ்டீவன் ஸ்மித் உலகில் அதிக வருமானத்தை  ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் எஞ்சலோ மெத்தியூஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும்.

 உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் நாடுகள் ரீதியாக கணிப்பிடப்பட்டது. இதன்படி அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவன் ஸ்மித்தும் இங்கிலாந்திலிருந்து ஜோய் ரூட்டும் இந்தியாவிலிருந்து விராட் கோஹ்லியும் தத்தம் நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டும் வீரர்களாக காணப்படுகின்றனர். 

இதன்படி, தென்னாபிரிக்கவிலிருந்து டுப்பிளெஸிஸும் இலங்கையிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸும் பாகிஸ்தானிலிருந்து சப்ராஸ் அஹமட்டும் மேற்கிந்தியத் தீவிலிருந்து ஜேசன் ஹோல்டரும் நியூஸிலாந்திலிருந்து கேன் வில்லியம்சனும் பங்களாதேஷிலிருந்து ஷகிப் அல் ஹசனும் ஸிம்பாப்வேயிலிருந்து கிரேம் க்ரீமரும் தத்தம் நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற  வீரர்களாகவுள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்திலுள்ள ஸ்டீவன் ஸ்மித், கிரிக்கெட் போட்டிகளில் ஒப்பந்தம் மற்றும் போட்டி கொடுப்பனவு போன்றவற்றில் ஆண்டொன்றுக்கு  1.47 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வருமானமாக பெறுகின்றார். இது இலங்கை ரூபா மதிப்பில் 22  கோடியே 32 இலட்சத்து  88 ஆயிரம் ஆகும்.

இதன் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் ஜோய் ரூட் ஆண்டொன்றுக்கு வருமானமாக 1.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதுடன்  மூன்றாவது இடத்திலுள்ள  இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோஹ்லி ஆண்டொன்றுக்கு வருமானமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டிக்கொள்கிறார்.

இதன் நான்காவது இடத்தில் தென்னாபிரிக்கத் தலைவர்  டுப்பிளெஸிஸ் உள்ளார். இவர் ஆண்டொன்றுக்கு 59 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுகின்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் ஆண்டொன்றுக்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி இப்பட்டியலில் ஐந்தவாது இடத்தை வகிக்கின்றார். இது இலங்கை மதிப்பில்  4 கோடியே 86 இலட்சத்து 40 ஆயிரமாகும்.

இதில் லீக்  போட்டிகளிலிருந்து பெறப்படும் வருமானம் விளம்பரங்களிலிந்து பெறப்படும் வருமானம் போன்றவை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.