சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத விவகாரம்: தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

16 Sep, 2026 | 01:12 PM
image

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி) 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவின் உடல்நிலை  தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையான  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

வழக்கு  நேற்று (15) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடயங்களை முன்வைக்கையில்,

' கனம் நீதிவான் அவர்களே.... இந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த 02 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீங்கள் உத்தரவிட்டிருந்தீர்கள். அந்த மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் வினவிய போது ,அதனை புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்க முடியாது எனவும், நீதிமன்றத்திற்கே அனுப்புவதாகவும் தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. எனினும், அந்த அறிக்கை இதுவரை அனுப்பப்படவில்லை.

இங்கு ஒரு பெரிய மருத்துவ சதி திட்டமிட்டு நடைபெறுகிறது. இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் 10 முதல் 15 நாட்கள் மட்டுமே வைத்தியசாலையில் தங்கியிருப்பார்கள். ஆனால் இந்த சந்தேக நபர் சுமார் 100 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியுள்ளார். அவருக்கு சிகிச்சையாக பற்களை நிரப்புதல், காதுகளை சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சைகள்  மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது அவரது இதய துடிப்பை சீராக்கும் கருவி  மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அது ஒன்றும் மிகப்பெரிய சத்திரசிகிச்சை அல்ல.

அவர் இரண்டு காரணங்களுக்காகவே வைத்தியசாலையில் தங்கியுள்ளார். முதலாவது, விசாரணைகளை சீர்குலைப்பது. இரண்டாவது, அவருக்கு மேலே உள்ள நபர்களை பாதுகாப்பது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர் மனநல அறிக்கையை சமர்ப்பித்து கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முயன்றார். அதன் பின்னர் அவரது முதலாளிகளுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதும், மூன்று நாட்களில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த சந்தேக நபர் வைத்தியசாலையை தனது ஓய்வறையாக மாற்றியுள்ளார்'

சந்தேக நபரின் சுகாதார நிலை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கிறேன்' என்றார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

'கனம் நீதவான் அவர்களே, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் பேரழிவு குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று முன்னதாகவே அறிந்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

1 ஆவது இராணுவ கவசப் புலனாய்வுப் படைப்பிரிவு வவுனியா பகுதியிலிருந்தும், 3 ஆவது கவசப் புலனாய்வுப் படைப்பிரிவு கிரித்தலே பகுதியிலிருந்தும் இயங்கி வருகின்றன. கடந்த காலத்தில் அரசியல் படுகொலைகள் மற்றும் தாக்குதல்கள் இந்த கிரித்தலே புலனாய்வு முகாமில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. கிரித்தலே புலனாய்வு முகாமிற்கு தகவல்களை வழங்கும் 'தம்பியன்' என்ற தகவல் வழங்குநர் ஒருவர் உள்ளார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய ஒருவராவார். அவர் இந்திய உளவுத்துறையுடனும் பணியாற்றியுள்ளார். இந்த நபர் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் தகவல்களை வழங்கி வருகிறார்.

இந்த தகவல் வழங்குநரை கையாளும் பொறுப்பில் கோப்ரல் சுரங்க செயற்பட்டுள்ளார். கோப்ரல் சுரங்கவிற்கு மேல் கேணல் ரணவீர உள்ளார். இந்த 'தம்பியன்' என்ற நபர் சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து கோப்ரல் சுரங்கவிற்கு தகவல்களை வழங்கியுள்ளார். ஆனால் அந்தத் தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சூலா கொடிதுவக்குவிற்கு வழங்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய தினமும், இந்த தகவல் வழங்குநர் மறுநாள் நடத்தப்படவிருந்த தாக்குதல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார். ஆனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்துள்ளது. இது ஒரு இராணுவ வீரரின் செயலா? அல்லது தேசத்துரோகச் செயலா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.

தாக்குதலுக்கு முந்தைய நாள் கிடைத்த இந்தத் தகவல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருடன் கலந்துரையாடியிருக்கலாம். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் கலந்துரையாடி மேல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடப்பதற்கு இடமளித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உடனடியாகச் செயற்பட்டிருந்தால் இந்தத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும்'

'அத்துடன் அரசியல்வாதியான ரிஷாட் பதியுதீன் மற்றும் தொழிலதிபரான அலாவுதீன் தொடர்பிலும் நான் விவரிக்க எதிர்பார்க்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரியான இன்சாப்பின் மாமனாரே இந்த தொழிலதிபர் அலாவுதீன் ஆவார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இந்த அலாவுதீன் என்பவரின் மகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், தடுப்புக்காவலில் இருந்த இந்தப் பெண் விடுதலை செய்யப்படுகிறார்.

இவ்வாறான செயல்களைச் செய்து கொள்வதற்காகவே சந்தேகநபரான சுரேஷ் சலே அரச  புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் சஹ்ரான் பற்றிய தகவல்களை மறைத்து, கீழ் மட்டத்தில் உள்ள நபர்களை மட்டுமே கைது செய்தார்.

விசாரணைகளில் வெளிவந்துள்ள தகவல்களின்படி, இந்த அலாவுதீன் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான அதிவேகப் படகுகள் மூலம் சஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவ்வப்போது இந்தியாவுக்குச் சென்று இலங்கைக்கு வந்துள்ளனர். இதற்கமைய சஹரானின் நடவடிக்கைகளுக்கு அலாவுதீன் என்ற தொழிலதிபர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். ரிஷாட் பதியுதீன் என்பவர் அரசியல் புகலிடம் மற்றும் பாதுகாப்பு  வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து நாட்களின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் 16 பேர் உயிரிழந்தனர். இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது. அங்கு  இருந்த நபர்களை உயிருடன் கைது செய்யும் வாய்ப்பு இருந்தது. அப்படி இருந்தும் தாக்குதல் நடத்தி இவர்கள் அனைவரையும் அழித்தது ஏன் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இத்தாக்குதல் குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற நியாஸ் என்ற ஊடகவியலாளரும் உயிரிழந்தார். இது கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும். இது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்றார்.

இதன்போது  குறிப்பிட்ட  நீதிவான், 'சந்தேகநபரின் சுகாதார நிலை குறித்து ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவிடம்  அறிக்கை கோர நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு கொழும்பு தேசிய வைத்தியசாலையிடம் தகவல்களைக் கோரியுள்ளது. அத்தகைய தகவல்கள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் ஊடாகக் கோருமாறு வைத்தியசாலை அவர்களுக்கு அறிவித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.அதன்பின்னர், இந்த  விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க  உத்தரவிட்டார்.

கடந்த  2 ஆம் திகதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் சுகாதார நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காமை மற்றும் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு கோரிய தகவல்களை வழங்காமை தொடர்பில் அடுத்த வழக்குத் திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிவான் அழைப்பாணை  பிறப்பித்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளுக்குள் தேரர்கள் அணியும் ஆடை தொடர்பில்...

2026-10-16 17:24:04
news-image

பாராளுமன்றம் ஒக். 20 முதல் 23...

2026-10-16 18:00:30
news-image

யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த...

2026-10-16 17:45:46
news-image

சுங்கத் திணைக்கள தலைமையகத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-10-16 17:22:16
news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27