நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் நல்ல மருந்து. அது தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஆய்வுகூடமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டும் நிலவேம்பு கசாயம் டெங்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. நிலவேம்பு கசாயம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. முழுமுழுக்க நில வேம்பு இரசாயன முறையில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னே பரிந்துரைக்கப்படுகிறது. எனவே நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

டெங்குவை கட்டுப்படுத்த வருவாய் துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. பொது மக்கள் காய்ச்சல் என்று தெரிந்த உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும், டெங்கு காய்ச்சலுக்கு ஊசி போடக்கூடாது என கடுமையாக கூறி வருகிறோம். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்யும் இரத்த அணுக்கள் பரிசோதனை கருவி அவசியம் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். தாமதமாக வராமல் உடனடியாக அரசு மருத்துவ மனையை நாடும் நோயாளிகள் முழுமையாக குணப்படுத்தப்படுகிறார்கள். டெங்கு இருக்கிறது என்று தவறான முடிவுகள் தரும் தனியார் இரத்த பரிசோதனை ஆய்வு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்