அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும் நிலை தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறதா? – நுவான் போபகே கேள்வி!

15 Sep, 2026 | 04:31 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

கடந்த காலங்களில் ஜே.ஆர். ஜயவர்தன, மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆட்சியாளர்களின் காலங்களில் அரசியலமைப்புத் திருத்தங்கள் அதிகாரத்தை மையப்படுத்த பயன்படுத்தப்பட்டதைப் போன்று, தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் அதே நிலை தொடர்கின்றதா என சட்டத்தரணி நுவான் போபகே கேள்வி எழுப்பினார்.

நடைமுறைக்கு வரவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உண்மையான நோக்கத்தை அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இளம் சட்டத்தரணிகள் சங்கமும் மக்கள் தொழில்வாண்மையாளர் மத்திய நிலையமும் இணைந்து திங்கட்கிழமை (14) அநுராதபுரத்தில் நடத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் அரசியலமைப்புத் திருத்தங்கள் பல சந்தர்ப்பங்களில் மக்களின் நலனை விட ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 50 வருடங்கள் நிறைவடையாத நிலையில் 22 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசியலமைப்பு 1788ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் 27 திருத்தங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் அரசியலமைப்பு எவ்வாறு அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

தற்போது முன்வைக்கப்படும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் இதே கேள்வி எழுகின்றது. உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் ஒரு வருடத்துக்கு அதிகரிப்பதற்கான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போதைய பிரதம நீதியரசர் எதிர்வரும் காலங்களில் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் பதவியில் வைத்திருப்பதற்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக இருந்தபோது, அவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாக இல்லாதவர் என்றும், அதற்கு எதிரான தீர்ப்புகளை வழங்குகின்றார் என்றும் கருதி அவரை பதவியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமக்கு ஆதரவாக இல்லாத பிரதம நீதியரசரை அகற்றுவது தவறு என்றால், தமக்கு ஆதரவாக இருப்பார் என நிறைவேற்று அதிகாரம் கருதும் ஒருவரை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் பதவியில் வைத்திருப்பதற்காக அரசியலமைப்பைத் திருத்துவதும் தவறானதே.

தற்போதைய பிரதம நீதியரசர் அரசாங்கத்துக்கு ஆதரவானவரா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் கடந்த கால அல்லது எதிர்கால தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு அவரை பதவியில் தொடரச் செய்வது நல்லது என நிறைவேற்று அதிகாரம் கருதினால், அது நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பாரதூரமான கேள்வியை எழுப்பும்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய ஆட்சியும் கடந்தகால ஆட்சியாளர்களின் நடைமுறைகளிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு ஒரு தனிநபரின் பதவியை நீடிப்பதற்கோ அல்லது ஆட்சியாளர்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கோ பயன்படுத்தப்படக்கூடாது.

எனவே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும். அரசியலமைப்பு மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்; அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் கருவியாக மாறக்கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளுக்குள் தேரர்கள் அணியும் ஆடை தொடர்பில்...

2026-10-16 17:24:04
news-image

பாராளுமன்றம் ஒக். 20 முதல் 23...

2026-10-16 18:00:30
news-image

யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த...

2026-10-16 17:45:46
news-image

சுங்கத் திணைக்கள தலைமையகத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-10-16 17:22:16
news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27