(க.சிவலிங்கமூர்த்தி)
மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அதிகாரத்தை வழங்கியது பழைய ஊழல் நிறைந்த எதிர்க்கட்சிகள் நாட்டை ஆட்சி செய்ததைப் போன்று செயற்படுவதற்காக அல்ல. நாட்டின் ஏழை விவசாயி மற்றும் தொழிலாளியின் பக்கம் நின்று அரசாங்கம் செயற்படும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர் ஆனால் இன்று அரசாங்கம் மேடைகளில் காட்சிகளை மட்டுமே காட்டி வருவதால் மக்கள் தோற்கடித்துத் துரத்திய ரணில் ராஜபக்சக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என மக்கள் போராட்டமுன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றம் சாட்டினார்.
நெல்லுக்கான உரிய விலை வழங்காமை உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக மக்கள் போராட்ட முன்னணி இன்று திங்கட்கிழமை (14) நுகேகொடைவில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்பொழுது விவசாயிகள் கடின உழைப்பில் பயிரிட்ட நெல் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காத பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. அரசாங்கம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, திருடர்களைப் பிடிக்கும் நாடகங்களை நடத்தி வருகிறது. கடந்த பருவத்துடன் ஒப்பிடுகையில் இந்தப் பருவத்தில் நெல் உற்பத்திச் செலவு ஏக்கர் ஒன்றுக்கு 24890 ரூபாவினால் அதிகரித்துள்ளது. யூரியா 100 கிலோ 2500 ரூபாவினாலும், எம்.ஓ.பி 25 கிலோ 2400 ரூபாவினாலும், டி.எஸ்.பி 12 கிலோ 610 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
விதை நெல்லுக்கான செலவு 1000 ரூபாவினாலும், உழவு இயந்திரக் கூலி 5000 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது. பத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்களின் கூலி 5000 ரூபாவினாலும், களைக்கொல்லிகளுக்கான செலவு 2200 ரூபாவினாலும், கிருமிநாசினிகள் 950 ரூபாவினாலும், அறுவடை இயந்திரத்தின் செலவு 5000 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
இதனால்தான் விவசாயிகள் நெல்லுக்குக் கூடுதலான விலையைக் கேட்டனர். ஆனால் அரசாங்கம் அதனைச் செய்யாமல் உத்தரவாத விலை தருவதாகக் கூறி தப்பியோடுகிறது. இலங்கையின் மொத்தக் கிடங்கு வசதிகள் 15 முதல் 20 இலட்சம் மெற்றிக்ட் தொண்களாக உள்ள நிலையில், அரசாங்கத்திடம் 2 முதல் 3 இலட்சம் மெற்றிக்ட் தொண் கிடங்குகளே உள்ளன.
பிரபல வர்த்தகர் ஒருவரிடம் மட்டுமே 1.5 இலட்சத்துக்கும் அதிகமான மெற்றிக்ட் தொண் கிடங்கு வசதிகள் உள்ளன. இந்த ஏகபோக நிறுவனங்கள் காரணமாக இன்று விவசாயிகளும் நுகர்வோரும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கும் முதலாளிமார் அந்த நெல்லை அரிசியாக மாற்றி பலமடங்கு இலாபம் வைத்து சந்தைக்கு விநியோகிக்கின்றனர்.
எனவே இப்போதாவது விவசாயிகளின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொண்டு நெல்லுக்கான சமான விலையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும்.
மறுபுறம் விவசாய உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக உடனடியாக விவசாய உள்ளீடுகளின் வரிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தாவிட்டால் நாட்டின் அனைத்து விவசாயிகளுடன் இணைந்து பாரிய நடவடிக்கைகளுக்குச் செல்ல நேரிடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM