இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வர முற்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவர் இன்று (19) காலை கைது செய்யப்பட்டார்.

ஜெத்தாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பணிபுரிந்த ஐம்பது வயதுடைய இவர், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்தார். எனினும், வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைகளின்போது இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத் துறையினர் அவரை முழுமையாகப் பரிசோதனை செய்தனர்.

அப்போது, இவரது உடலிலும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அங்கியிலும், காலில் அணிந்திருந்த விசேட பட்டியிலுமாக மொத்தமாகச் சுமார் ஐந்தரைக் கிலோ தங்க நகைகளை இவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட நகைகளின் பெறுமதி இரண்டரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் என சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் நாணயத் தாள்களை வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட மலேசிய நாட்டவர் ஒருவரையும் சுங்கத் துறையினர் கைது செய்தனர்.