(எம்.மனோசித்ரா)
நாட்டில் செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி, எரிபொருள் விலையை உயர்த்துவதற்குத் தனியார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதற்கு அரசாங்கம் மெத்தனப் போக்கில் ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எல்.ஐ.ஓ.சி, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், சந்தைக்குக் குறிப்பாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல் விநியோகிப்பதைக் கணிசமாகக் குறைத்துள்ளன.
ஒரு லீற்றர் டீசலில் 100 முதல் 150 ரூபா வரை நஷ்டம் ஏற்படுவதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், வரவிருக்கும் விலை அதிகரிப்பைப் பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்டும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனிம எண்ணெய், நீர் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவர வேண்டும் எனப் பாராளுமன்றத்தில் நான் யோசனை முன்வைத்தேன். மின்சாரக் கட்டணம் கட்டுப்படுத்தப்படுவது போல, எரிபொருள் விலையும் மக்களின் வசதிக்கேற்பக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மாகாணசபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே அரசாங்கம் புதிய தேர்தல் முறைமை தொடர்பான குழுக்களை அமைத்து நாடகமாடுகிறது. 159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசாங்கம், 22ஆவது திருத்தத்தை அவசரமாகக் கொண்டுவரக் காட்டும் அக்கறையை மாகாணசபை தேர்தலை நடத்துவதில் காட்டவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு மிக வேகமாகச் சரிந்துள்ளதால், தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்திலேயே தேர்தலை ஒத்திவைக்கின்றனர். அரசாங்கத்துக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமாயின், முதலில் வடமேல் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நான் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு வடமேல் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தயார். இதற்காகச் சத்தியக்கடதாசி வழங்கவும் நான் தயார்.
வடக்கு, கிழக்கு மக்கள் உட்பட முழு நாட்டுக்கும் சேவை செய்யாமல், பெருமளவு மக்கள் பணத்தை விரயம் செய்யும் வெள்ளை யானையாக மாறியுள்ள மாகாண சபைகளுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் மூலம் அவை மீண்டும் இயங்கச் செய்யப்பட வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM