இந்தியாவில் இடம்பெற்றுவரும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் நொக் - அவுட் சுற்றில் ஈரான்,ஸ்பெயின்,மாலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

லீக் சுற்று போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவடைந்தன. இதையடுத்து நொக்-அவுட் சுற்று போட்டிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின.

இந்நிலையில்,கோவாவில் இடம்பெற்ற முதல் போட்டியில் ஈரான், மெக்சிகோ அணியை எதிர்கொண்டது. இதில் ஈரான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. மற்றுமொரு போட்டியில் மாலி - ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் மாலி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

கவுஹாத்தியில் இடம்பெற்ற போட்டியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்தன. ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

கொல்கத்தாவில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு  முன்னேறியது.