இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் நேற்றையதினம் இரவுவேளையில் பிரகாசமான ஒளியுடன் பாரிய சத்தமொன்று கேட்டதாக அப்பகுதி மக்கள் பலரும் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சத்தத்திற்கும் வெளிச்சத்திற்கும் காரணத்தை ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

விண்கல் ஒன்றின் பாகம் எனக் கருதப்படும் மர்மப்பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பில் விளக்கமளித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, குறித்த பிரகாசமான ஒளியும் பாரிய சத்தமும் எரிகற்களின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப்பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். 

விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் புமியை நோக்கி விழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.45 முதல் 9 மணி வரையில் இந்த சத்தம் ஒளியும் தென்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனை காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானித்துள்ளனர்.

தென் கடற்பரப்பிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வானில் இருந்து மர்மமான ஒளி ஒன்று வீழ்வதை அவதானித்துள்னர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறுதிசெய்துள்ள, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம், காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறிய அளவான நில அதிர்வையும் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, புவியின் வளிமண்டலத்தில் திடீரென நுழைந்த விண்கல் ஒன்றின் பாகம் எனக் கருதப்படும் மர்மப்பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளது.

குறித்த எரிகல்லை பொது மக்கள் அணுக முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவலை வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.