சர்தார் 2 - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:07 PM
image

தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ் & ஐவிவை என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள்: கார்த்தி, எஸ். ஜே. சூர்யா,  மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, நிழல்கள் ரவி, நாசர், அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த் மற்றும் பலர்.

இயக்கம்: பி. எஸ். மித்ரன்

மதிப்பீடு : 2.5/5

'சர்தார்' படத்தின் முதல் பாகத்தில் இயக்குநர் பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் விபரீதத்தையும்.. அதன் பின்னணியில் உள்ள நாசக்கார எண்ணங்களையும் விவரித்திருந்தார். அதேபோல் 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்திலும் சமூகத்திற்கு ஏதேனும் நன்மை விளைவிக்கும் கருத்துக்களை மீண்டும் இயக்குநர் விவரித்திருக்கிறாரா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

முதல் பாகத்தின் முடிவில் நாட்டுக்காக உழைத்த உளவுத்துறை அதிகாரியான சர்தார் சந்திரபோஸ்( கார்த்தி)  'தேச விரோதி' என தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பார்.

இதை அவரது மகனான விஜய் பிரகாஷ் ( கார்த்தி) நம்பாமல் தன் தந்தையை பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார். இதனால் தன் தந்தையுடன் பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கவும் விரும்புகிறார்.

இந்நிலையில் உளவுத்துறை 'ஓபரேஷன் டோக்கு' என்ற பெயரில் ஒரு ரகசிய நடவடிக்கையை முன்னெடுக்கிறது. இந்த நடவடிக்கையின் நோக்கம் இரண்டாம் உலகப்போரில் எதிரிகளை அழிப்பதற்காக ஜப்பான் நாடு தயாரித்த ஒரு உயிரியல் ஆயுதத்தை தேடி கண்டறிந்து அழிப்பது தொடர்பானது.

இது தொடர்பான நடவடிக்கையில் விஜய் பிரகாசும் ஈடுபடுத்தப்படுகிறார். இவருடைய தேடலில் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாரா( மாளவிகா மோகனன்) வின் மகள் ஃபைசா ( ஆஷிகா ரங்கநாத்) கிடைக்கிறார். ஃபைசாவிடம் இருக்கும் குறிப்பை வைத்து, அந்த ரகசிய ஆயுதம் தொடர்பான விடயங்களை தேடுகிறார்கள். இதில் ஒரு காணொளி கிடைக்கிறது.

அந்த காணொளியில் உளவுத்துறை அதிகாரியான சாரா அந்த ஆயுதத்தின் தீவிரத்தையும், அதனை கட்டுப்படுத்தி அழிப்பதன் அவசியத்தையும் விவரிக்கிறார்.

இந்த தருணத்தில் யோகி ( எஸ் ஜே சூர்யா) எனும் சர்வதேச கூலிப்படையைச் சார்ந்த தலைவன் இந்த உயிரியல் ஆயுதத்தை கைப்பற்றி, தன் வல்லாதிக்கத்தை நிரூபிக்க திட்டமிடுகிறார். இந்நிலையில் அந்த ஆயுதம் எங்கிருக்கிறது? அதனை யார் கைப்பற்றினார்கள்? அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? இல்லையா? இந்த ஓபரேஷன் டோக்குவில் உளவுத்துறை வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பரபரப்புடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

சிறிய அளவிலான பாதிப்புகளுக்காக அதாவது தலைவலி, கால்வலி போன்ற பாதிப்புகளுக்காக அருகில் இருக்கும் மருந்தகங்களுக்கு சென்று சுயமாக மருந்து மாத்திரைகளை தெரிவு செய்து பாவிக்கும் மக்களுக்கு அதனால் ஏற்படும் எதிர்கால உடலியல் கேடுகளை இப்படத்தில் விவரித்திருக்கிறார் சமூக பொறுப்புள்ள படைப்பாளியான பி எஸ் மித்திரன்.

ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சத்திர சிகிச்சையோ பிரத்யேக மருந்தியல் சிகிச்சையோ செய்தாலும்.. அதற்கு எதிர் வினை நிகழாத அளவிற்கு உங்கள்  உடல் மாற்றும் பெற்றுவிடும் என்ற எச்சரிக்கையை அவருக்கே உரித்தான திரை மொழியில் விவரித்திருக்கிறார்.  இதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

உளவுத்துறை அதிகாரிகள் , இரண்டாம் உலகப்போர் காலகட்டம், ஜப்பான் நாட்டின் உயிரியல் ஆயுதம், அது தொடர்பான குறிப்புகளின் குறியீடுகள், அதனை குறி வைக்கும் எதிரிகள் கூட்டம் என சர்வதேச அளவிற்கு ஸ்பை திரில்லருக்குரிய விவரங்கள் பிரமிக்கும் வகையில் விவரிக்கப்பட்டிருந்தாலும், படத்தை பார்க்கும் பாமர பார்வையாளர்களுக்கு எதுவும் மனதில் தங்காமல், உணர்வை தாக்காமல் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் கடந்து செல்வது தான் சோகம்.

இதைவிட படத்தின் நீளம் அதிகம். அவை சண்டை காட்சிகளாகட்டும்... சேசிங் காட்சிகளாகட்டும்... அல்லது உச்சக்கட்ட காட்சிகளாகட்டும் அனைத்தும் திகட்டும் அளவிற்கு நீளம் அதிகம் என்பதால்.. ரசிப்பதை விட சற்று எரிச்சலும் அதிகமாகிறது.

உணர்வுபூர்வமான சென்டிமென்ட் காட்சிகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அவை ஏற்படுத்த வேண்டிய தாக்கம் மனதில் நீடிக்க விடாமல் அடுத்தடுத்த நீளமான காட்சிகளால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

முதல் பாதியை விட இரண்டாம் பாகத்தில் சற்று விறுவிறுப்பு அதிகம் என்றாலும் யோகி கதாபாத்திரத்தின் திரை தோற்றம் படத்தொகுப்பாளரின் கத்திரியை கடந்து செல்வதால்...?!!

இதுபோன்ற ஸ்பை திரில்லர் திரைப்படத்தில் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையையும்.. பல அடுக்குக் கொண்ட யோகி போன்ற கதாபாத்திரத்தையும் வடிவமைத்திருப்பது சிறப்பு என்றாலும் அதனை வெகுஜன பார்வையாளர்களிடத்தில் வலிந்து திணிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் சர்தார் 2 சற்று சோர்வையும் தருகிறார்.

சர்தார், விஜய் பிரகாஷ் என அப்பா, மகன் எனும் இரண்டு கதாபாத்திரத்திலும் கார்த்தி நடிப்பில் இரு மடங்கு உழைத்திருக்கிறார்.

சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் எக்சன் காட்சிகளிலும் அசத்துகிறார்.

ஃபைசா கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகை ஆஷிகா ரங்கநாத்திற்கான திரை பங்களிப்பு குறைவு என்றாலும், தன் அழகான இளமையால் அதனை எளிதாக நிறைவு செய்கிறார். யோகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா வழக்கம் போல் பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்து தன் இருப்பை நிரூபித்துக் கொள்கிறார்.

ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவும் , சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பக்கபலம். இதில் இப்படத்தின் மூலம் சதம் அடித்திருக்கும் சாம் சிஎஸஸை தாரளமாக பாராட்டலாம். இதிலும் பல இடங்களில் தன்னுடைய பிரத்யேக ஒலி அமைப்பால் ரசிகர்களை கவர்கிறார். மனித உடலில் ரசாயனத்தின் அளவு கட்டுப்பாட்டை கடந்தால்.. அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கும் இந்த 'சர்தார் 2' எக்சன் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

சர்தார் 2 - ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணி 2.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'ஒட்டாரம்' படத்தின்...

2026-10-15 15:00:15
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி'...

2026-10-15 14:59:41
news-image

நடிகர் பிரியன் நடிக்கும் 'வெகுளி' படத்தின்...

2026-10-15 14:15:51
news-image

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த சூரியின் புதிய...

2026-10-15 14:16:31
news-image

நாட்டின் முரண்பாடுகளின் வலிகளை வெளிப்படுத்தும் ‘ரியர்...

2026-10-15 12:00:48
news-image

அலைகளை வென்ற காளி : மண்டாடி!...

2026-10-14 17:19:14
news-image

நடிகர் சசிகுமார் வெளியிட்ட நடிகர் சரணின்...

2026-10-14 15:01:43
news-image

ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல்...

2026-10-14 14:50:07
news-image

கருணாஸ் - வெற்றி இணைந்து மிரட்டும்...

2026-10-13 17:30:54
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஹலோ காதல்'...

2026-10-13 17:28:22
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட நடிகர்...

2026-10-13 17:26:35
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய ஜெய் நடிக்கும் புதிய...

2026-10-13 15:47:21