தயாரிப்பு : ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட்
நடிகர்கள் : சூரி, சுகாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டண்ட் சிவா மற்றும் பலர்.
இயக்கம் : மதிமாறன் புகழேந்தி
மதிப்பீடு : 2.5/5
தமிழ் சினிமாவில் 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி.. தொடர்ந்து கதையின் நாயகனாகவே பயணித்து வரும் சூரி, கடல் சார்ந்த பகுதியில் வாழும் மீனவராக நடித்திருக்கும் 'மண்டாடி' திரைப்படம் அவருடைய நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
முகவை பட்டினம் எனும் தமிழகத்தின் கடற்கரையையொட்டிய மீனவ கிராமத்தில் பாரம்பரிய பாய்மர படகில் கடலில் பயணித்து, மீன் பிடிப்பதுடன் அது தொடர்பான பிரத்யேக பாரம்பரியமான பாய்மர படகு போட்டியிலும் மண்டாடியாக பங்கு பற்றி தன்னுடைய 'முகவை மைந்தன்' அணிக்காக தொடர் வெற்றியை ஈட்டித் தருகிறார் முத்து காளி( சூரி) . இவருக்கு அதே பகுதியில் வாழும் மூத்த மண்டாடியான மச்சமுனி ( சத்யராஜ்) வழிகாட்டியாகவும், குருவாகவும் திகழ்கிறார். இவருடைய மகள் ஏஞ்சல் ராக்கம்மாவை ( மகிமா நம்பியார்) முத்துக்காளி காதலிக்கிறார்.
அதே தருணத்தில் முத்து காளிக்கு நிகராக மண்டாடியாக திகழ்பவர் அவருடைய நண்பரான சாட்டாபுலி. சாட்டா புலியின் தந்தை இடும்பையா ( ஸ்டண்ட் சிவா) படகினை உருவாக்கி விற்பனை செய்து அதில் தனித்துவமான முத்திரையை பதிக்க வேண்டும் என திட்டமிடுகிறார். அதற்கு இந்த முகவை மைந்தன் எனும் அணியை தங்களுடைய வணிக ரீதியிலான சுயலாபத்திற்காக பயன்படுத்தவும் நினைக்கிறார். இதற்கு சாட்டப் புலியும் சம்மதிக்க தன்னுடைய நண்பரான முத்துக்காளியை அவருக்குத் தெரியாமல் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்த தொடங்குகிறார்.
இதை முதலில் தெரிந்து கொள்ளாத முத்து காளி ஒரு புள்ளியில் சாட்டாப்புலியின் தந்தை, மச்ச முனியின் மீது கை வைக்க இதனால் ஆத்திரமடையும் முத்துக்காளி, சாட்டாப்புலியின் தந்தையை அடிக்க, முத்துக்காளியும், சாட்டாப்புலியும் பிரிகிறார்கள். முத்து காளிக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் காரணமாக அங்கு வாழ பிடிக்காது சென்னைக்கு செல்கிறார்.
அங்கு ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளத்தில் உயிர்காக்கும் வீரராக பணியாற்றுகிறார். இருபது ஆண்டுகள் கழித்து அவருடைய காதலியான ஏஞ்சலின் மகன் மாரி ( மிதுன் ஜெய்சங்கர்) முத்து காளியிடம் அடைக்கலம் புகுகிறார். இதன் பின்னணியிலும் சாட்டாப்புலி இருக்க ஆத்திரமடையும் முத்து காளி மீண்டும் தன் பிறந்த மண்ணிற்கு திரும்பி என்ன செய்தார்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் கதை களம் மற்றும் பாரம்பரிய பாய்மர படகு போட்டி அதற்கான காட்சி மொழி விவரணங்கள் மிக மிக புதிது.
இது ஒன்றே ரசிகர்களுக்கு போதும் என படக் குழுவினர் தீர்மானித்து, இதற்கான பின்னணியை வலுவான குடும்ப அமைப்புடன் இணைத்துள்ளனர். இது சூரியின் ரசிகர்களுக்கு போதும் என்றாலும், பொது பார்வையாளர்களுக்கு வேறு ஏதேனும் விவரங்களையும் இணைத்திருக்கலாமோ..! என எண்ணத்தோன்றுகிறது.
இருப்பினும் மிக பரந்து விரிந்த கடலில் பாய்மர படகு எனும் பாரம்பரியமான சாகச விளையாட்டை நுட்பமாக பிரமிக்கும் வகையில் காட்சிப்படுத்தி இருப்பது... ரசிகர்களுக்கு விவரிக்க இயலாத அற்புதமான தருணங்களை வழங்குகிறது. இதற்காக கடுமையாக உழைத்த ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சி இயக்குநர், படத்தொகுப்பாளர், பின்னணி இசையமைப்பாளர், கலைஞர்கள் ஆகியோர்களுக்கு தாராளமாக பூங்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவிக்கலாம்.
முத்து காளி தன்னுடைய குருவாக போற்றும் மச்சமுனியின் மகளான ஏஞ்சலை காதலிப்பதும் மச்சமுனியின் மரணத்திற்கு முத்து காளிதான் காரணம் என ஏஞ்சல் நினைப்பதும் பிறகு அந்த குற்றத்தில் தன்னுடைய பங்களிப்பும் உண்டு என்று மனம் வருந்தி, அவளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் வழக்கமான எதிர்பார்த்த காட்சிகள் என்பதால் அதில் பாரிய அளவில் தாக்கம் ஏற்படவில்லை.
பல பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் வணிகம் தான் முதன்மையானது என்பதால்.. அதில் உள்ள உள்ளூர் தனம் அன்னியமாகிவிட்டது என இயக்குநர் கவலையுடன் விவரித்திருப்பது நல்ல விடயம்.
அதற்காக உள்ளூர் இளைஞர்கள் உணர்வை மட்டுமே முதன்மைபடுத்தி சாகசமும், ஆபத்தும் கொண்ட பாரம்பரிய பாய்மர படகு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனம்.
ஆனாலும் அந்தக் காட்சியில் நடித்திருக்கும் உள்ளூர் மீனவர்கள் அயராது உழைத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
முத்து காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி வழக்கம் போல் எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டியும்... எமோஷன் காட்சிகளில் மௌனமாகவும் இருந்து ரசிகர்களை வசீகரிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை ஒரு படி மேலே உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
ஏஞ்சல் ராக்கம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகிமா நம்பியார் - இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்.
சாட்ட புலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் சுகாஸ் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு என்றாலும்.. பல காட்சிகளில் மண்ணுக்கு அந்நியமான தோற்றத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு தமிழில் பின்னணி பேசியவர் ( வெற்றி மாறன்) அபாரம்.
முத்துக்காளியின் நண்பராக வரும் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீந்திர விஜய் மற்றும் கத்தார் ரவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணன் ஆகியோர் சில இடங்களில் தங்களுடைய உணர்ச்சிகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.
மச்சமுனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் சில காட்சிகளிலே வந்தாலும்.. தன் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், படத்தொகுப்பு என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய கடுமையான உழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி, ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள்.
பாய் மர படகில் கடலில் பயணிக்கும் போது காற்றின் வேகமும், வீசும் திசையையும் நொடிப் பொழுதில் துல்லியமாக அவதானித்து.
அதற்கேற்ற வகையில் கடலில் பயணித்து உடன் வருகை தந்திருக்கும் மீனவர்களை பத்திரமாக கரைக்கு திரும்ப அழைத்துச் செல்லும் முன்னோடி தான் மண்டாடி. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் மண்டாடியாக பொறுப்பேற்றிருக்கும் சூரி தலைமையிலான அவரது குழுவினர் ரசிகர்களுக்கு எதிர்பாராத சாகச அனுபவத் தருணங்களை வழங்கியிருந்தாலும் அவற்றின் அளவு குறைவு.
மண்டாடி - சாகச கடலோடி



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM