மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு; தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 5 மணி நேரம் போராட்டம்

11 Sep, 2026 | 02:39 PM
image

தமிழ்நாடு, மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவரை, மருத்துவ விடுப்பு கோரி சென்றபோது தனித்துணை ஆட்சியர் காலணியால் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை (10) மாலை தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் மீட்கப்பட்டு, மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை கண்காணிப்பதற்காக மண்டபத்தில் தனித்துணை ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் வெளியூர்களிலும், பிற மாவட்டங்களிலும் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவும், மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியூர் செல்லவும் தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற்றுச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கையிலிருந்து அகதியாக தனுஷ்கோடிக்கு வந்து, 2007ஆம் ஆண்டு முதல் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகன் (50), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காகவும் சென்னை செல்ல அனுமதி கோரி தனித்துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட தனித்துணை ஆட்சியர், விடுப்பு வழங்குவதற்கு இலஞ்சம் கேட்டதாக ஜெகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, பணம் வழங்காததால் தனது விடுப்பு மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக தனித்துணை ஆட்சியர் கலை மன்னனைச் சந்திக்க ஜெகன் சென்றுள்ளார்.

இதன்போது, தனித்துணை ஆட்சியர் தனது காலணியைக் கழற்றி தன்னைத் தாக்க முயன்றதாக ஜெகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை ஜெகன் காணொளியாகப் பதிவு செய்ததுடன், இது தொடர்பாக காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தமிழரை தனித்துணை ஆட்சியர் காலணியால் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்கள் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த இராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரர், ஜெகன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், தனித்துணை ஆட்சியர் கலை மன்னன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவரை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும், இலங்கைத் தமிழர்கள் விடுப்பு பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த இராமநாதபுரம் வட்டாட்சியர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் தகவல் தெரிவிப்பதாகவும், வரும் திங்கட்கிழமை தனித்துணை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தை கைவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளனர்.

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை தனித்துணை ஆட்சியர் காலணியால் தாக்க முயன்றதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33