முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

தற்போதுவரை காணாமல்போன இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன்ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர்.

குறித்த சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் விடுமுறை நாட்களில் இனிமையாக பொழுதை கழிக்கும் நோக்கோடு ஆயிரக்கணக்கான சுற்றுலா பிரயாணிகள் வந்து செல்லும் நிலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு கடற்பாதுகாப்பு படை (லைஃப் கார்ட்) வசதிகள் எவையும் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.