“தாஜ் மஹால் முஸ்லிம் பெண்ணின் நினைவிடமல்ல; இந்துக்களின் கோயில்”

By Devika

18 Oct, 2017 | 05:53 PM
image

உலக அதிசயங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்ட தாஜ் மஹால், மும்தாஜின் நினைவிடமல்ல, இந்துக்களின் கோயில் என்று, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினய் கட்டியார் ‘புதிய’ விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அயோத்தியில், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி பகுதியில் இராமர் கோயில் ஒன்றைக் கட்டுவதில் மும்முரமாக முயற்சி செய்பவர்களில் கட்டியாரும் ஒருவர். இவர் நேற்று (17) ஒரு புதிய(!) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“முன்னொரு காலத்தில் ‘தேஜோ மஹால்’ என்ற பெயரில் இந்துக்களின் கோயிலாக விளங்கியது. இன்னமும் இந்துக் கடவுளர்களின் உருவங்கள் தாஜ் மஹாலினுள் இருக்கின்றன. தேஜோ மஹால் முகலாயப் பேரரசர் ஷா ஜஹானுக்குப் பரிசளிக்கப்பட்டதேயொழிய, மும்தாஜின் நினைவாக அவர் அதைக் கட்டவில்லை. உண்மையில் அதுவொரு நினைவிடம் என்றால், அங்கு ஏன் அத்தனை அறைகள் இருக்க வேண்டும்? எனவே, தாஜ் மஹாலின் பெயரை தேஜோ மஹால் என்று மீண்டும் மாற்றுவதுடன், அதை இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும்” என்று கட்டியார் கூறியுள்ளார்.

மேலும், இந்தியர்களின் கட்டமைப்புகளை வெள்ளையர்கள் அழிக்கவில்லை என்றும், முகலாயர்களே அழித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, உத்தரப் பிரதேசத்தின் உல்லாசத் துறை குறித்த பிரசுரங்களில் தாஜ் மஹால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தது. அத்துடன், தாஜ் மஹால் இந்தியக் கட்டுமானப் பண்பை வெளிப்படுத்தவில்லை என்பதுடன், தாஜ் மஹாலை யார் கட்டியிருந்தாலும், அதன் நிர்மாணப் பணிகளில் இந்தியர்களின் வியர்வையும், இரத்தமுமே சிந்தப்பட்டிருக்கிறது என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தது சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில், வினய் கட்டியாரின் இந்தப் ‘புதிய’ கருத்து அந்த சர்ச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right