கையிருப்பு திரட்டல் மற்றும் முகாமைத்துவத்தை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலையில் உலக நாடுகள் - இலங்கையின் பொருளாதார நெருக்கடியை உதாரணமாக் கூறி மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

10 Sep, 2026 | 07:40 PM
image

(நா.தனுஜா)

பூகோள அரசியல் மாற்றங்கள், உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்கால நிச்சயமற்ற தன்மைகள் என்பவற்றின் காரணமாக உலக நாடுகள் அவற்றின் அந்நியச் செலாவணி கையிருப்புத் திரட்டல் மற்றும் நிர்வாகம் என்பவற்றுக்கான வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு 2022ஆம் ஆண்டு தீவிர பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை முகங்கொடுத்த அனுபவங்கள் நிதிப் பாதுகாப்புச் செயன்முறை இல்லாததன் மிக மோசமான விளைவுகளை நினைவூட்டக்கூடிய ஒரு வலுவான எச்சரிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில்  வியாழக்கிழமை (10) கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற கையிருப்பு முகாமைத்துவ மாநாட்டில் சிறப்புரை ஆற்றியபோதே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

தற்போது பூகோள அரசியல் மாற்றங்களை பொருளாதார மற்றும் நிதி சார்ந்த தீர்மானங்களிலிருந்து பிரித்து நோக்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், உலகம் புதியதொரு சகாப்தத்துக்குள் நுழைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை முதலீட்டு செயன்முறைகளிலிருந்து வேறுபட்ட ஒரு வெளிப்புறக் காரணியாகக் கருதமுடியாது. மாறாக அது இப்போது கையிருப்பு முகாமைத்துவத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. 

உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் தேசிய கையிருப்புக்களை முகாமை செய்யும்போது அரசியல் பதற்றங்கள், வர்த்தகத் தடைகள், நிதியியல் இடையூறுகள் என்பவற்றைக் கருத்திற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன' என்றும் ஆளுநர் கரிசனை வெளியிட்டார்.

அதேவேளை 2022ஆம் ஆண்டு இலங்கை முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த அவர், 'போதிய வெளியகப் பாதுகாப்பு இல்லாவிடின் என்ன நடக்கும் என்பதை அந்தப் பொருளாதார நெருக்கடி தெளிவாகக் காண்பித்தது. அவ்வேளையில் நாட்டின் கையிருப்புகள் அச்சுறுத்தல் மிகுந்த மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்தன' எனத் தெரிவித்தார்.

மேலும் அந்நெருக்கடியின் பின்னர் நாட்டின் பெரும்பாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதையும் இலக்காகக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, 2022 - 2023 வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது கையிருப்பின் பெறுமதி மற்றும் வெளியகப் பாதுகாப்பு என்பன வலுவடைந்திருப்பதாகக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் விரைவான தீர்மானம்...

2026-10-12 13:46:56
news-image

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க...

2026-10-12 13:49:45
news-image

பாடசாலைப் பொருட்கள், அத்தியாவசிய உணவுகளுக்கு வற்...

2026-10-12 17:26:58
news-image

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம்: அரசாங்கத்தை...

2026-10-12 17:38:36
news-image

மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக் குறைவால்...

2026-10-12 17:23:28
news-image

இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான...

2026-10-12 22:12:08
news-image

கொரிய தன்னார்வ அமைப்பின் விசேட பிரதிநிதிகள்...

2026-10-12 22:07:54
news-image

எமது அரசாங்கத்தில் பாதாள உலகக் குழுக்களுக்கு...

2026-10-12 14:10:40
news-image

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலுக்கும் விமர்சனங்களுக்கும் முன்னுரிமையளித்துள்ளது...

2026-10-12 12:59:44
news-image

சிறைச்சாலை நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்யுமாறு...

2026-10-12 17:39:35
news-image

மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த...

2026-10-12 19:42:21
news-image

கலாலயா கலாசார மற்றும் இளைஞர் அபிவிருத்தி...

2026-10-12 18:40:21