(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைக்கான பிரித் பாராயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட புனித நீரைத் தெளிப்பதற்கு உலங்கு வானூர்தியொன்றை வழங்குமாறு முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தாய்நாட்டை பாதுகாப்பதற்கான அமைப்பின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்வதற்காகவே மழைக்கான பிரித் பாராயணம் நடத்தப்பட்டது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னரும் நாட்டில் வறட்சி ஏற்பட்டிருந்த போதிலும், இம்முறை ஏற்பட்டுள்ளதைப் போன்ற கடுமையான நிலைமை காணப்படவில்லை. காடுகளில் வாழும் விலங்குகள் நீரின்றி துன்பப்படுவதுடன், குளங்களில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன. விவசாயிகளும் நீரின்றி பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எமது பணியை பிக்குகள் மிகவும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளோம். தற்போது பல பகுதிகளில் மழை பெய்து வருவதாக அறிகின்றோம். எனவே, இனி அரசாங்கத்தின் பொறுப்பாகும். புனித நீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிப்பதற்கு உலங்கு வானூர்தியொன்றை வழங்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரியுள்ளேன்.
இதற்கு முன்னரும் இரண்டு வறட்சியான காலப்பகுதிகளில் அரச அனுசரணையுடன் பிரித் பாராயணம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நாட்டிலுள்ள குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்தது. இம்முறையும் கடந்த இரண்டு மாதங்களாக மழையின்றி இருந்த பகுதிகளில் மழை பெய்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் எதிர்கொண்ட சவால்களையும், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையையும், மே தினத் தடை உள்ளிட்ட சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். ஜே. ஆர். ஜயவர்தனவையும் பிக்குகள் முன் மண்டியிடச் செய்தோம். இவை வரலாற்றில் இடம்பெற்ற விடயங்கள்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் பிரித் பாராயணத்துக்கு அனுசரணை வழங்கியதுடன், இராணுவத்தினரும் பிரித் மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உதவினர். தற்போது எமது பணி நிறைவடைந்துள்ளது. மக்களைப் பாதுகாப்பதும் நாட்டை வளப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பு.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வாகனத்தில் சென்று புனித நீரைத் தெளிக்க முடியாது. எனவே, உலங்கு வானூர்தி மூலம் அதனை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகத்துடனும் தொடர்பு கொண்டுள்ளேன். உலங்கு வானூர்தி வழங்குவது தொடர்பில் பரிசீலிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து விகாரைகளிலும் பிக்குகள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து நிமிடங்களாவது மழைக்கான பிரித் பாராயணம் செய்து நாட்டுக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும். விவசாயிகள், மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
இயற்கைக்கு நாம் சவால் விட முடியாது. ஆனால் இயற்கையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவே இந்தப் பிரித் பாராயணத்தை நடத்தினோம். புனித நீரை நாட்டின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்க அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM