(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் 36 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்றுள்ள படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாதுகாப்புப் படைகளில் தலைமை அதிகாரி பதவி உண்மையில் தேவையற்றது என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஒருவருக்கு கௌரவம் வழங்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அனாவசிய செலவுகளை ஏற்படுத்துகின்ற இந்த பதவி நீக்கப்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
சமூக, பொருளாதார மற்றும் நிதி நிலைமை தொடர்பில் பார்க்கும் போது இது ஒரு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகின்ற பதவியாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இந்த பதவியை அகற்றினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டாது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து சவேந்திர சில்வா வரை 17 ஆண்டுகள் இந்தப் பதவி தொடர்ந்திருக்கின்றது.
செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரை மறக்க முடியாத ஒரு கறை படிந்த நாளாகும். கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் 90 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமிற்கு கொக்குவில், பிள்ளையாரடி உள்ளிட்ட அப்பகுதியில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவர். பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் 40 பேர் பெண்கள் 85 பேர் வயது முதிர்ந்தவர்கள் என மொத்தமாக 186 பேர் போய்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற அந்த முகாமில் வைத்து அன்றைய தினம் அத்தனை பேரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மாத்திரம் கடுமையான காயங்களுடன் தப்பியுள்ளார். அவர்தான் கிருஷ்ணகுமார். அவர் இப்போதும் அயல்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அதேபோன்று இன்னும் ஒருவர் அந்த சம்பவத்தை பற்றை மறைவிலிருந்து பார்த்தவர் என்று அறியப்படுகிறது. அவர் வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர். அவரோடு மேலும் சிலரும் பற்றைகளுக்குள் மறைந்திருந்து இந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் அந்த முகாமில் இருந்த படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி 185 பேரையும் படுகொலை செய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்திருந்தார். அந்த ஆணைக்குழு மூலம் சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரம் கூட அதன் போது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இராணுவ முகாமிற்கு காமினி வர்ணகுல சூரிய என்பவரே பொறுப்பாக இருந்துள்ளார்.
36 ஆண்டுகள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும் அந்த விசாரணை முடிவடைவதற்கு முன்பாக செம்மணியில் மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு தற்போது 584 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோமரத்ன ராஜபக்ஷ அது தொடர்பில் தெரிவிக்கையில் அங்கு 600-க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதேபோன்று 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி வந்தாறுமூலை அகதி முகாமிலிருந்து 174 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவரும் இதுவரை திரும்பவில்லை. அவர்கள் காணாமற் போனவர்களாக உள்ள நிலையில் அவர்கள் நாவலடி அல்லது கிண்ணையடி பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்வதை நாம் வரவேற்கின்றோம். போதை வஸ்து, பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட குற்றவாளிகள் இவ்வாறு கைது செய்யப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்படுகின்றார்கள்.
எனவே 36 ஆண்டு காலமாக நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM