சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது; பாதிக்கப்படுவது இலங்கை மக்களே – ஜீ. எல். பீரிஸ்!

09 Sep, 2026 | 04:45 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை பணம் செலுத்தி உறுப்புரிமை பெறும் தனியார் கழகங்களாக சித்தரித்து அவமதிப்பது முழுமையான புரிதலின்மையை வெளிப்படுத்துவதாகவும், இவ்வாறான கருத்துகளால் பாதிக்கப்படுவது அந்த அமைப்புகள் அல்ல, இலங்கை மக்களே எனவும் ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த அமைப்பு பணம் செலுத்தி உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளும் ஒரு தனியார் கழகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த சட்டத்தரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச ரீதியில் மதிப்புமிக்க அமைப்பொன்றை இவ்வாறு வர்ணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பது தனியார் கழகமல்ல. பொதுநலவாய நாடுகளிலுள்ள சட்டத்துறை சார்ந்தவர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். அதன் உறுப்புரிமையைப் பெறுவதற்காக கட்டணம் செலுத்துவது மாத்திரமே அந்த அமைப்பின் செயற்பாடுகளையும் நோக்கங்களையும் தீர்மானிப்பதில்லை.

இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றன. அந்த அமைப்புகளுக்கு உறுப்புரிமைக் கட்டணம் அல்லது பங்களிப்புத் தொகை செலுத்துவதும் வழக்கமான நடைமுறையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கு இலங்கை பங்களிப்புகளைச் செலுத்தி வருகிறது.

அந்த அமைப்புகளுக்கு இலங்கை பணம் செலுத்துகிறது என்பதற்காக அவை இலங்கைக்கு எந்தவிதமான பயனையும் வழங்கவில்லை எனக் கூற முடியாது. மாறாக, பல தசாப்தங்களாக அந்த அமைப்புகள் இலங்கையின் பல்வேறு துறைகளுக்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் ஊடாக இலங்கையின் சுகாதாரத்துறைக்கு நீண்டகாலமாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் காணப்படும் தற்போதைய சூழ்நிலையிலும் சர்வதேச சுகாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. அதேபோன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1936 ஆம் ஆண்டு முதல் இலங்கையுடன் தொடர்புபட்டு தொழிலாளர் உரிமைகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது.

உணவு மற்றும் விவசாய அமைப்பும் இலங்கையின் விவசாயத்துறைக்கு நீண்டகாலமாக உதவிகளை வழங்கியுள்ளது. உரம், விதைகள், விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், நிதி வளங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்றொழில் சமூகத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களிலும் இவ்வாறான சர்வதேச ஒத்துழைப்புகள் காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு பாரிஸை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகிறது. இலங்கைக்கும் அந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது. குறிப்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச ஆலோசனைகளும் ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு அவசியமானவை.

எனவே, சர்வதேச அமைப்புகளுக்கு உறுப்புரிமைக் கட்டணம் செலுத்துகிறோம் என்பதற்காக அவற்றை அவமதிப்பது அல்லது அவற்றின் பெறுமதியை குறைத்து மதிப்பிடுவது அறியாமையையும் அகந்தையையும் வெளிப்படுத்துவதாகும். இவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது அந்த சர்வதேச அமைப்புகள் அல்ல. பாதிக்கப்படுவது இலங்கையும் இலங்கை மக்களுமேயாகும்.

உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு செயற்படும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ முடியாது. பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, தொழிலாளர் உரிமைகள், விவசாயம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளது.

இதனைப் புரிந்து கொள்ளாமல் சர்வதேச அமைப்புகளை பணம் செலுத்தி உறுப்புரிமை பெறும் அமைப்புகளாக மாத்திரம் சித்தரிப்பது நாட்டின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13