பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது - பிரதமர் 

09 Sep, 2026 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தோட்டப் பகுதிகளில் தேயிலை  பயிர்ச்செய்கைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தேயிலைப் பொருளாதாரத்தை பாதிக்கலாம். மேலும் தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகள் வரையறுக்கப்பட்டவையாகவும் பல பகுதிகள் மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்டுள்ள காரணத்தினாலும் காணிகள் குறைவாகவே உள்ளன. பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை  அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் முன்வைத்த கேள்விகளுக்கு   பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில்  பகுதியளவில்  நிர்மாணிக்கப்பட்ட 962 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றில் 629 வீடுகள்  பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகளை பயனாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் பேரிடர் வீட்டுத் திட்டங்கள், இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் தோட்ட வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பேரிடர் வீட்டுத் திட்டங்களின் கீழ், மாவட்டச் செயலகங்கள் ஊடாக தற்போது 392 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதேவேளை 118 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயனாளிகளுக்கு கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவியின் 10,000 வீட்டுத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் கீழ், நிர்மாணத்திலுள்ள 1,300 வீடுகளில் 522 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணியுடன் கூடிய வீடொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அதற்கிணங்க, தற்போதைய இந்திய நிதியுதவி வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடொன்றைப் பெறுவதற்கான முதன்மைத் தகைமைகளைப் பூர்த்தி செய்த 2,184 பயனாளிகளுக்காக 129 தோட்டங்களில் வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு  நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மேலும் இந்த அதிகாரசபையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. அதற்கமைய, 2025ஆம் ஆண்டு 42.5 மில்லியன் ரூபா, 2026ஆம் ஆண்டு 85 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட  மலையக அபிவிருத்தி அதிகார சபையை இல்லாதொழிப்பதற்கு தீர்மானிக்கவில்லை.

இந்திய நிதியுதவியின் 10,000 வீட்டுத் திட்டத்தின் கீழ், 1300 வீடுகளில் 522 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

மேலும், இந்த வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 2529 வீடுகளைக் கட்டுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தோட்டப் பகுதிகளில் தேயிலை   பயிர்ச்செய்கைக்கு  ஒதுக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தேயிலைப் பொருளாதாரத்தை பாதிக்கலாம். 

மேலும் தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகள் வரையறுக்கப்பட்டவையாகவும் பல பகுதிகள் மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்டுள்ள காரணத்தினாலும் காணிகள் குறைவாகவே உள்ளன. பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை  அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13