(க.சிவலிங்கமூர்த்தி)
உயர்நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து, ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கக்கூடிய ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் ஊடகச் சுதந்திரத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என தினன தகுன கூட்டிணைவு கண்டனம் வெளியிட்டுள்ளது.
தினன தகுன கூட்டிணைவின் தலைமைத்துவ சபை மற்றும் நிறைவேற்றுச் சபையினால் செவ்வாய்க்கிழமை (08) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பட்டய ஊடகத் தொழில்வாண்மையாளர்கள் நிறுவகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையின் கீழ் குறித்த சட்டமூலம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ள போதிலும், சட்டமூலத்தின் 3(i), 4(o), 5(4)(b) ஆகிய ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(g) ஆகிய உறுப்புரைகளுடன் முரண்படுவதாக மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு ஒருமித்தமாகத் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமையை உறுதிப்படுத்துவதுடன், 14(1)(g)ஆம் உறுப்புரை ஒருவர் தாம் விரும்பும் சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடுவதற்கான அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது.
சட்டமூலத்தின் 3(i)ஆம் ஏற்பாட்டின் கீழ் ஊடகவியலாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அதிகாரம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஊடகவியலாளர்களை அங்கீகரிப்பதற்கான தெளிவான சட்ட வரையறைகள் இல்லாத நிலையில் இவ்வாறான பரந்த அதிகாரம் வழங்கப்படுவது சுயாதீன ஊடகவியலாளர்களின் தொழில் உரிமைக்கு தடையாக அமையக்கூடும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று, 4(o)ஆம் ஏற்பாட்டின் மூலம் முழுமையான ஊடகத்துறையையும் கண்காணித்து கட்டுப்படுத்தக்கூடிய வகையில் நிறுவகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுவது தேவையற்ற கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான அதிகாரங்கள் குறித்த நிறுவகத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் செயற்பாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 5(4)(b)ஆம் ஏற்பாட்டின் கீழ் பாராளுமன்றத்தின் போதிய கண்காணிப்பின்றி இடைக்கால நிர்வாகச் சபைக்கு விதிகளை உருவாக்குவதற்கான பரந்த அதிகாரம் வழங்கப்படுவது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக அமையக்கூடும் எனவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்கள் அல்லது நீக்கங்களை மேற்கொள்ளாமல் குறித்த ஏற்பாடுகளை அவ்வாறே நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுமாயின், அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையின் கீழ் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை தேவைப்படும்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள அரசியலமைப்பு முரண்பாடுகளைப் புறக்கணித்து, பாராளுமன்றத்தில் காணப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி குறித்த ஏற்பாடுகளை சட்டமாக்குவதற்கு அரசாங்கமோ அல்லது வேறு எந்தத் தரப்போ முயற்சிக்குமானால், அது நாட்டின் ஊடகச் சுதந்திரத்துக்கும் ஜனநாயகப் பொறிமுறைக்கும் எதிரான கடுமையான நடவடிக்கையாக அமையும்.
ஊடகவியலாளர்களின் தொழில் சுதந்திரம் அரச அங்கீகாரத்துடன் மாத்திரம் தொடர்புபடுத்தப்படும் நிலை உருவாக்கப்படக்கூடாது. சுயாதீன ஊடகவியலாளர்கள், விசாரணை ஊடகவியலாளர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் எழுத்தாளர்கள் தமது தொழிலை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.
அதேவேளை, சமூக வலைத்தளங்கள், காணொளி ஊடகங்கள் மற்றும் மாற்று ஊடகத் தளங்கள் போன்ற புதிய ஊடக வடிவங்களும் மக்களின் தகவல் பெறும் உரிமையில் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றை ‘தரநிலைகளைக் கண்காணித்தல்’ என்ற பெயரில் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உருவாக்கப்படுமானால், மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனக் குரல்களையும் ஒடுக்குவதற்கான சூழல் ஏற்படக்கூடும்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கான அதிகாரப்பத்திரமல்ல. நீதிமன்றம் அடிப்படை உரிமைகளுடன் முரண்படுவதாக அடையாளப்படுத்தியுள்ள ஏற்பாடுகளை மாற்றமின்றி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்துவது அரசியலமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நோக்கத்தையே கேள்விக்குட்படுத்தும்.
எனவே, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுமையாக மதிப்பளித்து, அரசியலமைப்புடன் முரண்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள 3(i), 4(o), 5(4)(b) ஆகிய ஏற்பாடுகளை உரிய முறையில் நீக்கவோ திருத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டமூலத்தை நிறைவேற்றும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் அரசாங்கமும் பாராளுமன்றமும் விலக வேண்டும்.
இந்த ஆபத்தான நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஊடக அமைப்புகள், குடிமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் தினன தகுன கூட்டிணைவு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM