அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணா விரதமிருக்கும் அரசியல் கைதிகளின் அரசியலமைப்பு உரிமை முற்றாகமறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டு  விடுவிக்கப்படவேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறமுடியாது எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், அரசாங்கம் இப்பிரச்சினையில் தீவிரமான தன்மையைக் காட்டாமையினால் தாங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து வருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய விடயங்களை வலியுறுத்தி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளது. பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் பல்வேறு தீங்குகள் காணப்படுவதால் அச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்பது அனைத்து தரப்பினரதும் கோரிக்கையாகும். 

அரசாங்கத்தினால் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிக்கு அமைவாக அச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலான சட்டம் உருவாக்கப்பட வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் தற்போது வரையில் அவர்கள் சிறைச்சாலையில் கழித்த காலத்தினை வைத்துப் பார்க்கையில் தண்டனைக் காலத்தினையே அவர்கள் அனுபவித்து நிறைவுசெய்திருப்ப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கான தண்டனைக் காலத்தினை விடவும் அதிகளவு காலப் பகுதியினை சிறைச்சாலையில் கழித்துள்ளார்கள். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள   அந்த நபர்கள் அரசியல் காரணங்களுக்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.  தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்று   வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான அரசியல் ரீதியான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்காது. மோதல் நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. 

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தினை வெறுமனே  சட்டப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. அதற்கு அரசியல் பரிமானம் காணப்படுகின்றது. ஆகவே இந்த பிரச்சினை  அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. 

1970, 1980களில் ஜே.வி.பி.கிளர்ச்சியின் போது பாரிய குற்றச்செயல்களில்  ஈடுபட்டவர்கள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள். அன்று அவ்வாறான கிளர்ச்சி மேற்கொள்ளப்படுவதற்கு அரசியல் பரிமாணமொன்று இருக்கின்றது. அந்த அரசியல் ரீதியான பரிமாணத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது. பொதுமன்னிப்பு அடிப்படையில் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். 

அவ்வாறிருக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவர்கள் விடுவிக்கப்படாது நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பத்தினர் இவ்வாறு நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். 

தற்போது நல்லிணக்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் விடுவிப்பதானது நல்லிணக்கத்தின் அடிப்படையாக அமையும். நுல்லிணக்கத்தினை மையமாக வைத்து நீங்கள் செயற்படவேண்டியது அவசியமாகும். 

அவ்வாறிருக்கையில் தற்போது மூவரின் வழக்குகள் வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டமைக்கு சாட்சிகளின் பாதுகாப்பே காரணமாக கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே இவர்களின் வழக்குளை மாற்றாது சாட்சிகளுக்கு பாதுகாப்பினை வழங்கியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. 

வழக்குகள் திடீரென மாற்றப்பட்டுள்ளமையால் அந்த நபர்களும் குடும்பத்தினரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு  முகங்கொடுக்கின்றனர். குறிப்பாக வழக்குகள் மாற்றப்பட்டுள்ள மூவர் தொடர்ச்சியாக உண்ணாவிரதப்போராட்டத்தினை மேற்கொண்டு வருவதால் உடல் நிலை மோசமடைந்துள்ளனர். 

வவுனியாவில் நீதிமன்றத்தின் மொழி தமிழாகும். அநுராதபுரத்தில் நீதிமன்ற மொழி சிங்களம் ஆகும். இந்த நபர்களுக்கு சிங்களம் தெரியாது. சிங்கள மொழி அறிவற்ற ஒருவர் தனது வழக்கினை தமிழில் விசாரிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார். இதற்கு அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடும் காணப்படுகின்றது. ஆகவே வழக்குகள் மாற்றப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணான விடயமாகும். 

அதுமட்டுமன்றி சிறைச்சாலையில் உள்ளவர்கள் விரும்பும் சட்ட உதவி  மறுப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தமக்கான நீதியை அடைவதற்கான மறுப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தனிப்பட்ட முறையில் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட அரசியல் பரிணாமம் இருக்கின்றது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள். அரசியல் ரீதியான பரிணமம் காணப்பட்டதால் ஜே.வி.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. 

அரசாங்கத்தினை எதிர்க்கவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இந்தப்பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது. அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று அரசாங்கத்தினால் கூறமுடியது. இந்த நாட்டில் மோதல் ஏற்பட்டிமையால் தான் அவர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றார்கள். இந்த நபர்கள் அரசியல் ரீதியாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் தான் இவ்வாறு தடுப்புக்காவலில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  

அரசியல் கைதிகள் விடயம் தனியே சட்டப்பிரச்சினையல்ல.  அது  அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தினை தீவிரமற்ற பிரச்சினையாக பார்க்க கூடாது. தமிழ் அரசியல் கைதிகளை ,  தீவிரமான முறையில் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்ற மன நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். வழக்குகள் மாற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. அரசியலமைப்பில் உள்ள உரிமை மறுக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது. இப்பிரச்சினையை மிகவும் தீவிரமாக அனுக வேண்டும் என்றார்.  

இதேவேளை சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளித்து உரையாற்றுகையில் குறுக்கீடு  செய்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. அது நீக்கப்படவேண்டும் என்று வாக்குறுதி அளித்துள்ளீர்கள். அதனை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அப்படியென்றால் அந்தச் சட்டம் நீக்கப்படவேண்டும். 

அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்சினையில் அரசாங்கம் தீவிரமான போக்கினை காட்டாமையினால் நாங்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து வருகின்றோம். ஆகவே நீங்கள்(அரசாங்கம்) காலதாமதம் செய்யாது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.