ஆதார் அட்டை இல்லாததால் பதினொரு வயதுச் சிறுமி பசியால் துடிதுடித்து இறந்த சம்பவம் ஜார்க்கண்டில் இடம்பெற்றுள்ளது.

சந்தோஷி என்ற அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் ஆதார் அட்டை பெற்றிருக்கவில்லை. அவர்களைப் போன்றே அக்கிராமத்தில் சுமார் பத்து குடும்பங்கள் ஆதார் அட்டை பெற்றிருக்கவில்லை.

மானிய உணவுப் பொருட்கள் பெறுவதற்கு ஆதார் இலக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்ததால், சந்தோஷியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட மானிய உணவுப் பொருட்கள் நிறுத்தப்பட்டன.

வறுமையின் பிடியில் சிக்கியிருந்த சந்தோஷி, பாடசாலையில் வழங்கப்படும் உணவை மட்டுமே உண்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த நவராத்திரி தினங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால் சுமார் நான்கு நாட்களாக சந்தோஷியும் அவரது குடும்பத்தினரும் பட்டினியில் இருந்துள்ளனர். இதில், பசி பொறுக்க முடியாத அந்தப் பதினொரு வயதுச் சிறுமியின் உயிர், பசியிலேயே பிரிந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அந்த மானில முதல்வர் ரகுபர் தாஸ் ஆணையிட்டுள்ளார்.