இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையில் பாதியை ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகக் குறைக்க இலங்கை கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.

மேற்படி குற்றத்துக்காக தனுஷ்கவுக்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், தனது வருடாந்த சம்பளப் பணத்தில் 20 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்தவும் நேரிட்டது.

எனினும், தனுஷ்க சார்பில் சிங்களே விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் சபையில் மனு கையளித்ததையடுத்து நேற்று (16) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், அடுத்த ஒரு வருடத்தினுள் தனுஷ்க மீண்டும் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பட்சத்தில், மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான தடையை அவர் அனுபவிக்க நேரும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.