போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி விற்பனை: திலந்த மாலகமுவ உள்ளிட்ட 4 பேருக்கு பயணத்தடை கோரிக்கை

Published By: Vishnu

07 Sep, 2026 | 07:01 PM
image

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

கொழும்பு 7 பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் உள்ள காணி ஒன்றை போலியாக தயாரிக்கப்பட்ட உரிமப் பத்திரத்தைக் கொண்டு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால், மோட்டார் கார் பந்தய வீரரான திலந்த மாலகமுவ உள்ளிட்ட 4 பேருக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் திங்கட்கிழமை (7) கோரியிருந்தது.

இந்த வழக்கு திங்கட்கிழமை (7) கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், குறித்த போலி காணி உரிமப் பத்திரம் தயாரிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றக்குழுவினரும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சாந்த விதானகமகே, டெஸ்மண்ட் அமரசிங்க, சமன் ஜயவீர மற்றும் திலந்த மாலகமுவ ஆகியோருக்கு வெளிநாடு செல்வார்களாயின் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதும் தடைப்படக்கூடும் என்பதால், அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

குறித்த காணியை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தப் பணத்தைப் பகிர்ந்துகொண்ட நபர்கள் மற்றும் பணத்திற்குப் பதிலாக 14 அதிசொகுசு வாகனங்களைப் பெற்றுக்கொண்ட கார் பந்தய வீரரான திலந்த மாலகமுவ தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு 7 பகுதியில் உள்ள காணி ஒன்றை போலி உரிமப் பத்திரங்களைக் கொண்டு ஒரு பில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த சம்பவத்தில், தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பன்னிப்பிட்டிய ஆரியபால (80 வயது) என்பவர் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணைக்கமைய விசேட நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்றில் தாக்கல் செய்து குற்றப்புலனாய் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்திருந்தனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலும் விடயங்களை முன்வைக்கையில், திலந்த மாலகமுவ என்பவருக்கு 14 வாகனங்கள் மூலம் இவ்வாறு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிய முடியாதுள்ளதால் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

முறைப்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்னர், அவர்களை வழக்கு விசாரணையின் சந்தேகநபர்களாகப் பெயரிட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கு பிரதான நீதிவான் முன்னிலையில் பரிசீலிக்கப்படுவதால், எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த நபர்களைச் சந்தேகநபர்களாகப் பெயரிட்டு, வெளிநாட்டுப் பயணத்தடை கோரும் கோரிக்கையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. கொழும்பு பார்ன்ஸ் பிளேஸ், இலக்கம் 18 இல் அமைந்துள்ள 43 பேர்ச்சஸ் காணியைப் பிரபல வாகன விற்பனை நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47