இந்தியாவில் ஒரு காலத்தில் சந்தை வாய்ப்பின்றி ‘நாய்ப்பழம்’ எனக் கைவிடப்பட்ட ஆனைக்கொய்யா, தற்போது விவசாயிகளுக்கு அதிக இலாபம் ஈட்டித் தரும் வணிகப் பயிராக உருவெடுத்து வருகிறது.
கடந்த 26 ஆண்டுகளாக தோட்டத் துறையில் பணியாற்றி வரும் வயநாடு கோட்டநாடு பிளாண்டேஷன்ஸ் குழுமத்தின் மேலாளர் மது போபையா, கோப்பித் தோட்டங்களுக்கு நிழல் வழங்குவதற்காக மட்டுமே முன்னர் பயிரிடப்பட்ட ஆனைக்கொய்யா, தற்போது முக்கிய வணிகப் பயிராக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டில் பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டி, தனது தோல் பராமரிப்புக்காக ஆனைக்கொய்யாவைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தப் பழத்துக்கான தேவை மற்றும் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 15,000 தொன் ஆனைக்கொய்யா இறக்குமதி செய்யப்படும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி 8,000 முதல் 9,000 தொன் வரையிலேயே உள்ளதாக மணிலால் பள்ளியத் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக கோப்பி மற்றும் மிளகு சாகுபடி பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆனைக்கொய்யா விவசாயிகளுக்கு சிறந்த மாற்றுப் பயிராக அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இறக்குமதி செய்யப்படும் பழங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆனைக்கொய்யாக்களின் சுவை, பதம் மற்றும் அளவில் சீரற்ற தன்மை காணப்படுவதாக மும்பையைச் சேர்ந்த ஹங்கர் இன்க் உணவகக் குழுமத்தின் தலைமைச் சமையல்கலைஞர் ஹுசைன் ஷாஹ்சாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வளர்க்கப்படும் ஆனைக்கொய்யா மரங்கள் மரபணு ரீதியாக மாறுபட்டிருப்பதால், சந்தைக்கு வரும் பழங்களின் தரத்திலும் வேறுபாடுகள் காணப்படுவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி பேரவையின் (ICAR) முதன்மை விஞ்ஞானி கணேசன் கருணாகரன் விளக்கியுள்ளார்.
மேலும், கட்டுப்பாடற்ற விவசாயப் பண்ணைகளிலிருந்து நோய்த்தொற்றுக்குள்ளான நாற்றுகள் பெறப்பட்டு பயிரிடப்படுவதால், 5 முதல் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மரங்கள் பட்டுப்போய் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்காக தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி, உயர்த்தப்பட்ட பாத்திகள் மற்றும் அடர் நடுகை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், அறுவடையை எளிதாக்குவதற்காக கிளைகளை வெட்டி மரத்தின் உயரத்தைக் கட்டுப்படுத்துவதும், முறையான மகரந்தச் சேர்க்கைக்காக இரு வேறு ரகங்களைச் சரியான முறையில் கலந்து நடுவதும் அவசியம் என இந்தோ-இஸ்ரேல் நர்சரியின் நிறுவுநர் ஹர்ஷித் கோதா தெரிவித்துள்ளார்.
சீரான மகசூல் மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக, உள்ளூர் மரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய ஆனைக்கொய்யா ரகங்களை விஞ்ஞானி கணேசன் கருணாகரன் உருவாக்கியுள்ளார்.
முறையான வழிகாட்டுதலும் உறுதியான சந்தை வாய்ப்புகளும் கிடைக்கும் பட்சத்தில், ஆனைக்கொய்யா சாகுபடி இந்திய விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என வயநாட்டைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஷிஜு செபாஸ்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM