ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் நாளை ஏழாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 63 ஆவது கூட்டத்தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. காரணம், இலங்கை தற்போது அமுலில் இருக்கின்ற ஜெனிவா பிரேரணைக்கு அமைவாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்து மூல அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல முக்கியமான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைத் திருத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டும், இராணுவ வசமுள்ள மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், சர்வதேச சமூகம் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்தி விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் போன்ற விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்கான இந்த வாக்குறுதிகள் முடங்கும் அபாயத்தில் உள்ளதாகவும், மாற்றத்திற்கான வேகம் இழக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீதான உளவுத்துறை கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆயுத மோதல் காலத்தில் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தில் குறிப்பிடும் படியான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகள் மீதான நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இம்முறை 63ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை தொடர்பில் விவாதமும் நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் அந்த விவாதத்தில் உரையாற்றவிருக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. அதுவும் முக்கியத்துவம் மிக்கதாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 57/1 என்ற பிரேரணை அமுலில் இருக்கின்றது. இது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்டது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரின் போது இந்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரை கிட்டத்தட்ட ஒன்பது பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திலும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அரசியல் தீர்வு, மாகாண சபை தேர்தல், காணி விடுவித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் இதில் முன்வைக்கப்படுகின்ற மிக முக்கியமான விடயமாகும். அதுமட்டுமன்றி தமிழ்ப்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக்கூடிய வகையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்கின்றமையே இங்கு கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. அதாவது பொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளில் கடந்த 16, 17 வருடங்களாக மிகப்பெரிய அளவு முன்னேற்றம் எதுவும் இன்னும் வெளிக்காட்டப்படவில்லை.
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நம்பகரமான விரிவான செயற்பாடுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதற்கு பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்த ஒரு செயற்பாடும் இடம்பெறாமல் இருக்கின்றமையே இங்கு கவலைக்குரிய விடயமாகும். அரசாங்கங்கள் பல மாறிவிட்டன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இதுவரையான காலப்பகுதியில் பல அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டன. தற்போது 50 வருட காலமாக எதிர்க்கட்சியில் இருந்த இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஆட்சிக்கு வந்துவிட்டது.
ஆனாலும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் இன்னும் இடம்பெறவில்லை. அதனை பதவிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதய சுத்தியுடன் கையாளவில்லை, ஆராயவில்லை, விசாரிக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும், காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும், யுத்த காலத்தில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீளளிக்கப்படுவது அவசியம். காணாமல் போனோர் தொடர்பான விடயங்களில் ஒரு நம்பகரமான விசாரணைப் பொறிமுறை அவசியமாகிறது. அதேபோன்று தற்போது செம்மணி மனித புதைகுழியிலிருந்தும் 500 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. இவை தொடர்பாகவும் சர்வதேச ரீதியான நம்பகரமான விசாரணைகள் அவசியமாகின்றன. இதுபோன்று பல விடயங்களை சுட்டிக்காட்டிக்கொண்டே போகலாம்.
ஆனால், அரசாங்கத்தை பொறுத்தவரையில் இந்த விடயத்தில் கை வைப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே தயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் மட்டுமல்ல, எந்த அரசாங்கமும் இந்த விடயத்தில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்துவதில் ஒரு தயக்கத்தையே காட்டி வருகிறது. அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு ஆட்சியில் இருக்கின்ற கட்சிகள் நழுவுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே அவர்களை அப்படியே புறக்கணித்துவிட்டு யாரும் பயணிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அனைவரது கடமையாகும். அந்த கடமையை யாரும் துஷ்பிரயோகம் செய்யவும் முடியாது, அதனை தட்டிக் கழிக்கவும் முடியாது, புறக்கணிக்கவும் முடியாது. அது சர்வதேச ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற உரிமை.
அந்த உரிமையை உறுதிப்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் ஏனைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக ஒன்பது பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. 16, 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையும் இந்த விடயத்தில் இன்னும் கவனமெடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது. அதாவது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தாக்கம், மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தக்கூடிய வகையிலான தீர்மானங்கள் இங்கு எடுக்கப்பட வேண்டும்.
அதனால் இந்த விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எப்படி இந்த பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் இது தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கை இம்முறையாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. வெறுமனே இந்த விடயத்தில் பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தமில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கூட்டத்தொடரானது பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM