ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு: கற்பாறை அகழ்வுத் திட்டத்திற்கு ராகுல தேரர் கண்டனம்!

06 Sep, 2026 | 12:33 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

ஜனாதிபதி பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவை ஏற்படுத்தும் வகையில் கற்பாறை அகழ்வு மைய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நாமல் உயன வனப்பூங்காவின் பாதுகாவலர் வனவாசி ராகுல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மில்லகல மற்றும் நாரங்கஸ்வௌ ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மதத்தலங்களை சூழவுள்ள நிலப்பரப்பில் இரு கற்பாறை அகழ்வு மையங்களை முன்னெடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (06) குறித்த பகுதிக்கு சென்று நிலமையை பார்வையிட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஜனாதிபதி பிறந்த பகுதியான மில்லகல மற்றும் நாரங்கஸ்வௌ ஆகிய பிரதேசங்களில் இரு கற்பாறை அகழ்வு மையங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியின் சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு வாழும் 3000க்கு மேற்பட்ட குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும், குடிநீர் வசதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த திட்டத்துக்கான அனுமதிப்பத்திரங்கள் 2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டவையாகும். தற்போதைய அரசினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அல்ல. எவ்வாறாயினும், இவ்வாறான அழிவுகரமான திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை முறையான களப்பரிசீலனைகள் இன்றி புதுப்பித்து வழங்கியதன் மூலம் அரச அதிகாரிகள் பாரிய தவறொன்றை இழைத்துள்ளனர்.

குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் போன்ற நிறுவனங்களின் அலட்சியப்போக்கும், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைமுக கொடுக்கல் வாங்கல்களுமே தற்போதைய நிலைக்கு பிரதான காரணங்களாகும்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. கிராம மக்கள் மற்றும் பௌத்த விகாரையின் கிணற்று நீரை பயன்படுத்தி வந்த போதிலும், தற்பொழுது அக்கிணறுகளிலும் நீர்மட்டம் மிகவும் குறைடைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், நிலத்தடி நீரை உறிஞ்சும் வகையிலான கற்பாறை அகழ்வு மைய திட்டங்கள் தொடருமானால், மக்கள் தங்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். மேலும், வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் கிராமங்களுக்குள் புகுவதுடன், விவசாய நிலங்களும், மரங்களும் அழியும் அபாயமும் உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி புதையல்களை தோண்டி எடுக்கும் செயல்கள் நடைபெற்றதை போன்று, இப்போதும் வட்டகல மயானத்திற்கு அருகாமையிலும், பிரதான வீதியை ஒட்டிய பகுதிகளிலும் புதிய கற்பாறை அகழ்வு மைய திட்டங்களை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழல் பேரழிவை உண்டாக்கும் என்பதுடன், அதன் விளைவுகளை அப்பாவி மக்களே அனுபவிக்க நேரிடும்.

எனவே, இந்த சுற்றாடல் அழிவை உடனடியாக தடுத்து நிறுத்த தற்போதைய ஜனாதிபதி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமது பிறப்பிடத்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டங்களை உடனடியாக ரத்து செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, மதத்தலைவர்கள், ஊர்மக்கள் மற்றும் பிரதேச அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சுற்றாடல் அழிவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13