பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டி, பாகிஸ்தானின், லாஹூர் கடாபி மைதானத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டிக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கான தனது விருப்பத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கை அரசாங்கம், பாகிஸ்தான் அரசாங்கம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் சுயாதீன பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பல்வேறு மதீப்பீடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் லாஹூரில் உலக பதினொருவர் அணியுடன் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்தியதன் பின்னர், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி முழுத் திருப்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் பரிந்துரைகள் தொடர்பிலும் கடந்த 16 ஆம் திகதி திங்கட்கிழமை கூடிய நிறைவேற்று குழுவில் பரிசீலிக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் 29 ஆம் திகதி லாஹூரில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள 3ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

குறித்த போட்டிக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் எதிர்வரும் 17 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டு 15 பேர் கொண்ட இலங்கைக் குழாமை எதிர்வரும் 20 ஆம் திகதி அறிவிக்க இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்  நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால மற்றும் ஏனைய உறுப்பினர்கள் லாஹூர் செல்லும் இலங்கை அணியுடன் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.