மோகன் லால் நடிக்கும் 'ஓபரேஷன் கங்கா' படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

05 Sep, 2026 | 04:27 PM
image

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஓபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகும் 'ஓபரேஷன் கங்கா' திரைப்படத்தில் மோகன்லால்,  பாக்யஸ்ரீ போர்சே, அர்ஜுன் ராம் பால், ஆதில் ஹுசைன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஸாஸ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.

ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்ற போரின் பின்னணியில் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின்போது உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் 'ஓபரேஷன் கங்கா' என்ற பெயரில் மிக பெரிய அளவில் துணிச்சலான மீட்பு பணியில் ஈடுபட்டது. இதனை மையமாக வைத்து இப்படத்தில் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்திற்காக ஜார்ஜியா, போலந்து, கஜகஸ்தான் ஆகிய வெளிநாடுகளிலும், டெல்லி, டேராடூன், கொச்சி ஆகிய இந்தியாவின் முக்கிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணுமோகன், மோகன்லால், கோகுலம் கோபாலன் ஆகியோர் கூட்டணியில் 'ஓபரேஷன் கங்கா' உருவாவதால் இதற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right