பெண்களில் மாதவிடாய் தள்ளிப் போகும் போது கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளவர்களில் நாம் கர்ப்பம் தரித்ததை பரிசோதித்து உறுதி செய்கிறோம். இவ்வாறு கர்ப்பம் தரித்துவிட்டால் பிரசவக்காலம்வரை மாதவிடாய் வரப் போவதில்லை. அதாவது குருதிக் கசிவு ஏற்படப் போவதில்லை. கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திலும் எதிர்பாராத விதமான திடீர் குருதிக் கசிவை ஏற்பட்டால் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைகின்றனர். இவ்வாறான குருதிக் கசிவால் வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஏதும் பாதிப்பு வந்து விடுமா என்பது தான் முதல் கேள்வியாகும்? அடுத்த  விடயம் தாய்க்கு ஏதும் உயிர் ஆபத்து நேரிடுமா என்ற சந்தேகம் ஏற்படும். இறுதியாக இப்படி கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டவர்களில் பிறக்கும் குழந்தையில் ஏதும் அங்கவீனக் குறைபாடுகள் வருமா என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கின்றது.

எனவே கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்பட்டால் நாம் இது ஏன் ஏற்படுகின்றது? இதனால் என்ன பாதிப்புகள் வரும்? இதற்கு செய்யப்படும் சிகிச்சைகள் எவை என்பது பற்றிய பொதுவான விளக்கம் மக்கள் மத்தியில் அவசியமாகின்றது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குருதிக் கசிவை ஆரம்ப கர்ப்ப காலக் குருதிக்கசிவு பிந்திய கர்ப்ப காலகக் குருதிக் கசிவு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்ப கர்ப்பக்காலக் குருதிக் கசிவுக்கான காரணங்கள் எவை?

கருவானது முதல் மாதத்தில் கர்ப்பப்பையில் பொருந்தி வளர ஆரம்பிக்கும்போது ஒருவித குருதிக் கசிவு ஏற்படும். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. இது ஒரு சாதாரண நிகழ்வாகும். கரு தொடர்ச்சியாக ஆரோக்கியமாக வளர்க்கின்றது. இதனை ஸ்கான் மூலம் உறுதிப்படுத்தலாம்.

அடுத்ததாக 2 மாத கர்ப்ப காலப் பகுதியில் அடி வயிற்று வலியுடன் ஏற்படும் குருதிக்கசிவு சற்று விரிவாக பரிசோதிக்க வேண்டிய விடயம். ஏனெனில் சில வேளைகளில் கருவானது கர்ப்பப்பையில் தங்காது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன்குழாயில் தங்குகின்றபோது இவ்வாறான வயிற்று வலியுடன் குருதிக்கசிவும் ஏற்படும். இதனை கால தாமதம் இல்லாமல் சரியான தருணத்தில் கண்டறிந்தால் தான் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற முடியும். இவை கவனிக்கப்படாமல் விட்டால் பலோப்பியன்குழாய் வெடித்து வயிற்றினுள் கூடுதலான குருதி போக்கு ஏற்பட்டு தாய்க்கு சிக்கல் ஏற்படும்.

ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்களில் ஏற்படும் குருதிக்கசிவு சிலவேளைகளில் இயற்கையாக கரு கலைந்து ஏற்படும் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதனை ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தால் இயற்கையாக கருக்கலைவதனை உறுதிப்படுத்தலாம். இதனையடுத்து இயற்கையான கரு கலைவதற்கான சிகிச்சையை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு சிலரில் இப்படி குருதிக்கசிவு ஏற்பட்டாலும் உள்ளே கருவானது எவ்வித ஆபத்தும் இல்லாமல் வளர்கின்றது. ஸ்கான் மூலம் கருவானது ஆரோக்கிமாக  வளர்வதனை உறுதிப்படுத்த முடியும். எனவே ஆரம்ப கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குருதிக்கசிவானது சில சமயங்களில் கருவானது இயற்கையாக கருகலையும் நிலைமையும் சில சமயங்களில் கருவானது எந்தவித ஆபத்தும் இல்லாமல் தொடர்ந்து வளரும் நிலையையும் கொண்டிருக்கும். ஆகையால் ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு ஏற்பட்டால் வைத்திய ஆலோசனை நாடி ஸ்கான் பரிசோதனை செய்வதன் மூலம் உள்ளே வளரும் சிசுவின் ஆரோக்கியம் தொடர்பாக அறிய முடியும். 

பிந்திய கர்ப்ப காலத்தில் ஏற்படும். குருதிக்கசிவுக்கான காரணங்கள் எவை?

பிந்திய கர்ப்ப காலம் என்கின்றபோது ஆறு மாதத்தில் இருந்து ஒன்பது மாதக் கர்ப்ப காலத்தை சொல்லலாம். இதில் பிரதானமாக இரண்டு வகைக் காரணிகள் குருதிக் கசிவை ஏற்படுத்தும். முதலாவது வகை கருவுடன் வளரும் நச்சுக்குடல் (Placenta) கர்ப்பப்பை வாசலை மூடி கீழே வளர்ந்திருந்தால் ஏற்படும் குருதிக்கசிவு. இதன்போது வயிற்றுவலி இருக்காது. குருதிப் போக்கு மட்டும் இருக்கும். அடுத்த காரணி கருவுடன் வளரும நச்சுக்குடல் கர்ப்பப்பையை விட்டு முற்கூட்டியே பிரியத் தொடங்குவதாலும் ஏற்படும் குருதிக் கசிவாகும். இதன்போது தாய்க்கு வயிற்று வலி ஏற்படும். அதாவது வயிற்று வலியுடன் ஏற்படும் குருதிக்கசிவு நச்சுக் குடல் பிரியத் தொடங்குவதால் ஏற்படும் வயிற்று வலி இல்லாமல் ஏற்படும் குருதிக்கசிவு நச்சுக்குடல் கர்ப்பப்பை வாசலை மூடி வளர்ந்திருப்தால் ஏற்படும். இவை பிந்திய கர்ப்ப காலத்தின் ஏற்படும் குருதிக்கசிவு வகைகள் இருப்பதால் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொண்டு பரிசோதனைகள் செய்வதன் மூலம் உரிய காரணிகளை கண்டறிந்து சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். அதாவது சில சமயங்களில் உடனடியாக சிசேரியன் பிரசவம் செய்வதன் மூலம் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு குருதிக்கசிவுகள் தாமதமாகிக் கொண்டுப் போனால் சில சமயங்களில் தாய்க்கு இரத்தம் கொடுக்க வேண்டிய நிலைமைகளும் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாயின் சரியான குருதி வகையையும் தெரிந்திருக்க வேண்டும். இதன் போது தான் பொருத்தமான குருதியை கொடுக்கக் கூடியதாக உள்ளது. 

ஆகையால் கர்ப்ப காலம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இரத்தக்கசிவு  ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு  ஏற்படுத்தும் பல காரணிகளும் பிந்திய கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவை ஏற்படுத்தும் இரு பிரதான காரணிகளும் உள்ளன. இவற்றை உரிய நேரத்தில் வைத்திய ஆலோசனை நாடி ஸ்கான் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். அதற்கேற்ப கால தாமதம் இல்லாமல் சிகிச்சைகளும் மேற்கொள்ள முடியும்.