(எம்.ஆர்.எம்.வசீம்)
சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரம ரத்னவுக்கு எதிராக எழுந்துள்ள பாரிய ஊழல் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வியாழக்கிழமை முன்னிலையாகியுள்ளனர். பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்), உதவிப் பணிப்பாளர் (நிதியியல்) மற்றும் போக்குவரத்து அதிகாரி ஆகிய மூவருமே இவ்வாறு ஆணைக்குழு முன்பு முன்னிலையாகியுள்ளனர்
சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட துறைப் பிரதானிகளை அனுப்புமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பாராளுமன்றப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீரவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு இணங்கவே, இந்த அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சபாநாயகர் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்கள், அதற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருள், பாராளுமன்றத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அவரது தனிப்பட்ட ஊழியர்களின் விபரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை மற்றும் ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.
பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் பிரதிநிதிக் குழாம் பிரதானியுமான சட்டத்தரணி சமிந்த குலரத்னவினால் கடந்த பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரான சமிந்த குலரத்னவிடம் கடந்த 13ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பல ஆவணங்களும் அவரால் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகளில், வாகன துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமான முறையில் இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளுதல், பாராளுமன்ற ஊடகப் பிரிவுக்குச் சொந்தமான உபகரணங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் பாராளுமன்றக் கணக்கின் கீழ் மேலதிக உணவு வசதியைப் பெற்றுக் கொள்ளுதல், அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி அதிகாரிகளை நியமிப்பதுடன் அவர்களுக்குக் கட்டணம் செலுத்துதல், அரசுக்குச் சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களைச் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை வழங்க மறுத்து மோசடிகளையும் ஊழல்களையும் மறைக்க முயன்றமை போன்றன அடங்குகின்றன.
இந்த ஊழல் செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 30 கோடி ரூபா (300 மில்லியன்) நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM