செ.சுபதர்ஷனி
சட்ட விரோத போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டது என சந்தேகிக்கப்படும் பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் வைப்புச் செய்து, பின்னர் அப்பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட வங்கி அதிகாரிகள் உட்பட 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (3) உத்தரவிட்டது.
இதன்போது மன்றில் முன்னிலையான நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவதில் ஏற்பட்ட தடைகள் மற்றும் சுங்க தலைமையகத்தால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக ஜெப்ரி மொஹம்மட் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, பிரதான சந்தேகநபருக்கு உதவி ஒத்தாசை புரிந்த 7 பேர் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.
அத்தோடு 21 நபர்களிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 180 நாட்கள் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையும் உரியவாறு பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேகநபரால் 89 நிறுவனங்கள் நடத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 36 நிறுவனங்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பணம் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்கும், அதனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும் வங்கி உத்தியோகத்தர்கள் உதவி ஒத்தாசை புரிந்துள்ளார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனியார் வங்கியொன்றின் உத்தியோகத்தரான 3 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் உள்ளிட்ட வங்கி உத்தியோகத்தர்கள் சிலர் பிரதான சந்தேகநபருக்கு உதவி ஒத்தாசை புரிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2025 சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் காரணமாக பிரதான சந்தேகநபரின் வங்கிக் கணக்கு தற்காலிகமாக வங்கி முகாமைத்துவ அதிகாரிகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு தமக்கு நெருங்கியவர்களின் பெயர்களில் பிரதான சந்தேகநபர் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துள்ளதோடு, வங்கி உத்தியோகத்தர்கள் நிர்வாகத்தை ஏமாற்றி பணப் பரிமாற்றங்களுக்கு உதவியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த வங்கி உத்தியோகத்தர்கள் பிரதான சந்தேகநபரின் போலி நிறுவனங்கள் இருந்த இடத்தை நேரில் சென்று கண்காணித்திருந்ததாகவும், அவற்றை உயர்தர வர்த்தக நிலையங்கள் எனக் குறிப்பிட்டு கள ஆய்வுக்கான அறிக்கைகளையும் சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பித்துள்ளனர்.
எவ்வாறெனினும் இதுவரை விசாரணை அதிகாரிகள் அவ்வாறு குறிப்பிடப்பட்ட 10 இடங்களை ஆய்வு செய்துள்ளதோடு, அவை வர்த்தக நிலையங்கள் அல்ல என்பதும் நிரூபணமாகியுள்ளது. அவ்வாறான பல நிறுவனங்களைப் பதிவு செய்வதற்காக அவற்றின் பணிப்பாளரின் தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள, அவரது வீட்டின் முகவரியே குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டால் வங்கி அமைப்பிலுள்ள தரவுகளை மாற்றியமைக்க, பண வைப்பு தொடர்பான தகவல்களை மாற்ற அல்லது சான்றுகளை மறைக்க வாய்ப்புள்ளதுடன், அதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும். ஆகையால், விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றைக் கோரினர்.
இதேவேளை, வங்கியின் அதிகாரிகளான 2, 3, 4, 5 ஆம் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது சேவைபெறுநர்கள் வங்கியின் (ஜூனியர் 1) கீழ் நிலை அதிகாரிகளாவர். விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டது போன்ற பணப் பரிமாற்றங்களை அங்கீகரிக்க அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. தமது சேவைபெறுநர்கள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், வங்கி அமைப்பு, கணினித் தரவுகள் அல்லது வங்கியின் ஆவணங்களை அணுக முடியாது. ஆகையால் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வாய்ப்பில்லை.
உயர் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த கீழ்மட்ட வங்கி அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். தமது சேவைபெறுநர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பிணை வழங்கக்கூடிய நிதி மோசடி தொடர்பான குற்றங்கள் என்பதால், வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரியிருந்தனர்.
இதன்போது நீதிவான் "இந்த விசாரணை தொடர்பான சம்பவங்கள் அனைத்தும் ஒரே விடயத்துடன் தொடர்புடையவையா அல்லது வெவ்வேறான சம்பவங்களா?" என விசாரணை அதிகாரிகளிடம் வினவினார்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைப் பணச்சுத்திகரிப்பு செய்த சம்பவமாகும். தற்போது நீதிமன்றத்துக்கு இதன் ஒரு பகுதி மட்டுமே அறிக்கையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் செய்யப்பட்ட 500 க்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றன எனக் கூறினர்.
இந்நிலையில் இருதரப்புச் சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்து, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM