சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் – 25 மாவட்டங்களிலும் விசேட திட்டம்!

04 Sep, 2026 | 04:45 PM
image

(செ.கவிஷனா)

பாடசாலை மாணவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடும் அதற்கு அடிமையாகும் போக்கும் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், பெண் பிள்ளைகளும் போதைப்பொருட்களைப் பயன்படுத்த தொடங்கும் ஆபத்தான கலாச்சாரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்று இலங்கை புனர்வாழ்வு பணியகத்தின் பேராசிரியர் வசந்தா சுபசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடும் அதற்கு அடிமையாகும் போக்கும் தீவிரமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. விசேடமாக, கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் மற்றும் நண்பர்களுடன் கூடும் சந்தர்ப்பங்களில் பெண் பிள்ளைகளும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கும் ஆபத்தான கலாச்சாரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தரம் 1 முதல் 11 வரை பயிலும் சுமார் 265,000 மாணவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுள்ளனர். குறிப்பாக, தரம் 10 மற்றும் 11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையை இடைநிறுத்துவதற்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கும் இடையில் நேரடித் தொடர்பு உள்ளமை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேரழிவிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு இலவச மறுவாழ்வுத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. பொலன்னறுவை, சேனபுரவில் அமைந்துள்ள 'நவோதவா மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையத்தில்' போதைக்கு அடிமையானவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை கட்டணமின்றி இலவசமாக மறுவாழ்வுச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரின் சுய விருப்பம் மற்றும் அவர் வசிக்கும் பகுதியின் கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் மூலம் இம்மையத்தில் இலகுவாக இணைந்துகொள்ள முடியும். இங்கு சேர்க்கப்படும் நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் முற்றிலுமாக இரகசியமாகப் பாதுகாக்கப்படுவதுடன், முறையான உடற்பயிற்சிகள், உளவியல் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்தில் மனிதர்களாக வாழ வழிவகை செய்யப்படுகிறார்கள்.

மறுவாழ்வு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நபர்கள் மீண்டும் பழைய பழக்கத்திற்குத் திரும்புவதைத் தடுப்பதற்காக அவர்களின் குடும்பத்தினருக்கு விசேட ஆலோசனைகள் வழங்கும் தனித்துவமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போதைக்கு அடிமையாதல் என்பது தண்டனைக்குரிய குற்றமல்ல, மாறாக அதுவொரு சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடிய நோய் என்பதை குடும்பத்தினருக்குப் புரிய வைத்து, அவர்களை அன்புடன் அரவணைக்கத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும். மறுவாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபவர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசாங்கம் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது.

சமூக மட்டத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள 1,422 கிராமங்களில் 'மக்கள் பாதுகாப்பு குழுக்கள்' அமைக்கப்பட்டு, போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்கள், தனியார் முதலாளிகள் மற்றும் கட்டடப் பணி அமைப்பாளர்கள், தங்கள் ஊழியர்கள் யாரேனும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை வேலையை விட்டு நீக்காமல் 2 அல்லது 3 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்தவுடன் அவர்களை எவ்வித பாரபட்சமுமின்றி மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மகேஸ் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

முழு நாடுமே ஒன்றாக தேசிய போதைப்பொருள் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பாடசாலைகளை இனங்கண்டு விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, அதிக ஆபத்துள்ள பாடசாலைகள் மற்றும் அத்தகைய பாடசாலைகளில் உள்ள ஆபத்தான குழுக்களை இனங்கண்டு, அவர்களுக்கான பிரத்தியேக போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சிகளை நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“வாழ்விற்கு ஆம் கூறுங்கள் – போதைப்பொருளுக்கு இல்லை கூறுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஊடாக, முழுமையான ஆளுமைமிக்க, கல்வி அமைப்பினூடாகவே போதைப்பொருளைப் புறம்தள்ளவும் சரியான முடிவுகளை எடுக்கவும் கூடிய வலுவூட்டப்பட்ட ஒரு சந்ததியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40
news-image

எரிபொருள் விநியோக நெருக்கடி: நாடளாவிய ரீதியில்...

2026-10-11 15:24:39