நாடுபூராகவுமுள்ள அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உட்பட ஏராளமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வருகிறது.

சிறுநீரகம், புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் அன்றாட வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிய வருகிறது. இதனால் சில வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான வைத்திய உபகரணங்களை நோயாளர்களிடம் கோருவதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிமிடம் வினவியபோது, விலைமனுக்கோரல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறே மருந்துப் பொருட்களில் சிறு அளவிலான தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகும். எனினும் நோயாளர்களை பாரியளவில் பாதிக்காத வகையில் குறித்த பிரச்சினை நிவர்த்திக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடின்றி உரிய வகையில் மருந்து பொருட்களை விநியோகிப்ப தற்கான சகல நடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டுள்ளது என்றார்.