அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் விடயத்தில் இலங்கை மேற்கொண்டுள்ள மாற்றங்கள் என்ன?

03 Sep, 2026 | 12:37 PM
image

(நிவேதா அரிச்சந்திரன்)

2022இல் சந்தித்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்காக பல கட்டமைப்புச் சீர்திருத்தங்களை இலங்கை முன்னெடுத்து வருகிறது. அதில் பிரதானமானது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும் விடயத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதாகவே இந்த கட்டுரை அமைந்துள்ளது.

இலங்கை 2022-இல் சந்தித்த கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மீளமைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி  திட்டத்தில் 2023 இல் இணைந்தது. 48 மாதங்கள் அதாவது 4 வருடகங்களைக்கொண்ட இத்திட்டத்துக்காக 2.9 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆரம்ப ஒப்புதலின் போது சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் இதுவரை 2.4 பில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டமானது 2027 ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது. அதனடிப்படையில் சுமார் 20 வீதமான நிதியே இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இறுதிக்கட்ட மதிப்பாய்வுக்கு முன்னதாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. 

குறிப்பாக அரசாங்கத்துறையில் வருமான இழப்பைக் குறைத்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல மாற்றங்கள் தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1. செலவை ஈடுசெய்யும் விலைக்கொள்கை 

சர்வதேச நாணயநிதியத்தின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றுதான், பொதுப் பயன்பாட்டு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி/வழங்கல் செலவுக்கு ஏற்ப சேவைக் கட்டணங்களை அமைப்பதாகும். மின்சாரம் மற்றும் எரிபொருள் விடயத்தில்  இலங்கை மின்சார சபை  மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து சந்தித்து வந்த பாரிய நிதி இழப்புகளைத் தடுக்க, சந்தை விலைக்கு ஏற்ப தானியங்கி விலை திருத்த சூத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரச நிதியில் இருந்து இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியச் சுமை பெருமளவு குறைக்கப்பட்டு, நிதி நிலைத்தன்மை சீரடைந்துள்ளது. 

2. அரச நிறுவன மறுசீரமைப்பு அலகு நிறுவல்

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு அலகு (State-Owned Enterprise Restructuring Unit - SRU) உருவாக்கப்பட்டது. சர்வதேச நிதியுதவி நிறுவனமான International Finance Corporation (IFC) போன்ற அமைப்புகளின் தொழில்நுட்ப ஆலோசனைகளுடன், முக்கிய அரச நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல்  மற்றும் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

3. மூலோபாய நிறுவனங்களில் பங்கை விற்பனை செய்தல் மற்றும் தனியார்மயமாக்கல் முயற்சி

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதிச் சுமையை ஏற்படுத்தும் மற்றும் வணிக ரீதியிலான 7 பிரதான நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றில் பங்குகளை விற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

⦁ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines)

⦁ இலங்கை டெலிகாம் (SLT)

⦁ லங்கா ஹோஸ்பிட்டல்ஸ் (Lanka Hospitals)

⦁ ஹோட்டல் டொபலிங் மற்றும் கிராண்ட் ஹயாட் (Hotel Developers / Hyatt)

⦁ லிட்ரோ கேஸ் (Litro Gas)

⦁ ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் (Sri Lanka Insurance Corporation)

அரசியல் சூழல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை முழுமையாகத் தனியார்மயமாக்குவதற்குப் பதிலாக, அவற்றை முறையான நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் திறம்பட இயக்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றதை அவதானிக்க முடிகிறது.

4. கடன் மறுசீரமைப்பு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு சுத்திகரிப்பு

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பெற்றிருந்த பாரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை அரசாங்கத்தின் மத்திய கணக்குக்குகு மாற்றுதல் மற்றும் பழைய நிலுவைகளை கட்டம் கட்டமாகச் செலுத்துதல் மூலம் அந்நிறுவனங்களின் நிதி நிலைமை மேம்படுத்தப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் கொள்முதலுக்காக அரசு வங்கிகளிடம் பெற்றிருந்த கடன்கள் குறைக்கப்பட்டு வங்கியியல் துறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட்டது.

5. சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் 

அரச நிதியியல் மேலாண்மைச் சட்ட வரைவின் கீழ் அரச நிறுவனங்களின் நிதிப் பொறுப்புக் கூறலை உறுதிசெய்யும் வகையில் புதிய (SOE சட்டம்) அதாவது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின்  நிர்வாகம், நிதிக் கட்டுப்பாடு மற்றும் சீர்திருத்தங்களை நிர்வகிப்பதற்கான சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. பணிப்பாளர் சபை நியமனங்களின் கீழ் அரசியல்பூர்வ நியமனங்களைத் தவிர்த்து, தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சுயாதீன இயக்குநர் வாரியங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கணக்காய்வு அறிக்கைகள் வெளிப்படைத்தன்மையின் கீழ் பிரதான 52 அரச நிறுவனங்களின் தணிக்கை செய்யப்பட்ட ஆண்டறிக்கைகளை குறித்த காலத்துக்குள் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கேற்ப அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு இலங்கையின் பொருளாதார மீட்புக்கு மிக முக்கியப் பங்கு வகித்தாலும், அதில் பல்வேறு சவால்கள் நிலவுகின்றன. 

மேற்படி சவால்களை சமூக மற்றும் அரசியல் ரீதியாக ஆராயும்பட்சத்தில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் பாரிய எதிர்ப்புகளை வெளியிட்டனர். அரச நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயமாக்குவது அல்லது சீர்திருத்துவது தொழில் இழப்பு மற்றும் பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தால் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. செலவை ஈடுசெய்யும் விலைக் கொள்கையினால் மின்சாரம், எரிபொருள் மற்றும் நீர் போன்ற அத்தியாவசியச் சேவைகளின் கட்டணங்கள் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டதால், நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் கணிசமாக உயர்ந்தது.கட்டண உயர்வுகளால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும போன்ற நிவாரணங்கள்  பல நேரங்களில் போதுமானதாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கொள்கை மாற்றங்கள் மற்றும் தேர்தல்கள் நிகழும்போது, அரச நிறுவனங்களை விற்கும் முடிவுகளில் தாமதங்கள் அல்லது திட்டங்கள் கைவிடப்படும் சூழல் உருவாகிறது. முக்கிய அரச வளங்கள் வெளிநாட்டு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக எழும் தேசியவாத மற்றும் சமூக ரீதியான கவலைகள் சீர்திருத்தங்களை மெதுவாக்குகின்றன. கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர் சார்ந்த சவால்கள் எனும்போது முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற அதிக கடனிலும் நிதி இழப்பிலும் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு தகுதியான சர்வதேச முதலீட்டாளர்களைக் கண்டறிவது கடினமாக உள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட சிக்கல்கள் நிலவுகின்றன. அதாவது நிறுவனங்களின் மறுசீரமைப்பு செயல்முறைகளில் சர்வதேச தரம் வாய்ந்த தணிக்கை, வெளிப்படையான ஏல நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான தடைகளை நிவர்த்தி செய்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.

மேலாண்மை மற்றும் நிறுவன ரீதியான சவால்கள் எனும்போது இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அரச வங்கிகளுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டியுள்ள பாரிய கடன்களை மறுசீரமைப்பது அல்லது அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றுவது திறைசேரிக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. அரசியல் நியமனங்களைத் தவிர்த்து, தொழில்முறை திறமையுடைய சுயாதீன பணிப்பாளர் சபைகளை அமைப்பதிலும், நிறுவனங்களுக்குள் நீடிக்கும் அரசியல் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் சவால்கள் நீடிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், இலங்கை அரசின் நிதி இழப்பைக் கணிசமாகக் குறைத்து, நிறுவனங்களின் நிதி ஒழுக்கத்தை உயர்த்தியுள்ளன. எனினும், நீண்டகால அடிப்படையில் இவை வெற்றிபெற வேண்டுமாயின் அரசியல் தலையீடற்ற சுயாதீன நிர்வாகமும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் சமூக பாதுகாப்பு வலைகளும் தொடர்ந்து பலப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவின் நீல மாணிக்க மோகம்: வெளிநாட்டு...

2026-10-16 11:25:23
news-image

நெருக்கடி நிலை முகாமைத்துவத்திலிருந்து காலநிலைத் தாங்குதிறனை...

2026-10-15 19:42:58
news-image

அரசியல், அரசியல்வாதிகளுக்கானது மட்டுமல்ல மக்கள் மயப்படுத்தப்பட்ட...

2026-10-16 15:08:08
news-image

அனோஜனின் மரணதண்டனை இரத்து சவூதி அரசுக்கு...

2026-10-14 17:29:26
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்தக்கட்ட பயணம்...

2026-10-14 14:11:28
news-image

ஆண்டின் முதல் 8 மாதங்களில் அரசின்...

2026-10-14 14:11:00
news-image

9 மாதங்களில் வெளிநாட்டு பணவனுப்பல் 6.13...

2026-10-14 12:57:11
news-image

வடக்கு ஏற்றுமதியாளர்கள் மன்றம் 2027க்கு வட...

2026-10-14 10:52:01
news-image

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 2030இற்குள் 36பில்லியன்...

2026-10-13 15:37:08
news-image

கறுப்புச் சட்டமும் 3ஆவது முன்னணியும்

2026-10-13 10:12:03
news-image

இலங்கை -இந்திய ஒப்பந்தம் இல்லாத 13ஆவது...

2026-10-13 09:57:16
news-image

சங்க காலத்திலிருந்து “சிலிக்கன்“ யுகம் வரை...

2026-10-12 11:17:29