காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான விடயங்கள் மீண்டும் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டத்திலும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. காணாமல் போனோருக்கு என்ன நடந்தது? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சர்வதேச காணாமல்போனோர் தினம் இன்று 30ஆம் திகதி சர்வதேச மட்டத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்திலும் இன்று மாபெரும் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு காணாமல்போனாரின் உறவினர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இந்த விடயமே தற்போது வெகுவாக சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி, அண்மையில் நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தபோது மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் மிகவும் அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இது கண்டனங்களையும் தோற்றுவித்திருந்தது.
வடக்கு, கிழக்கு தமிழ்ப்பேசும் கட்சியினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதனை வன்மையாக கண்டித்திருந்தனர்.
இன்று நடைபெறவிருக்கின்ற மாநாடானது மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. காணாமல் போனோர் விவகாரத்தில் இது ஒரு முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் காணாமல் போனாரின் உறவினர்கள் ,பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு இன்னும் பதில்கள் கிடைத்ததாக தெரியவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு பல கோணங்களில் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டங்கள், சுழற்சி முறையிலான ஆர்ப்பாட்டங்கள் என பல நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தவிதமான ஒரு தீர்வும் இந்த விடயத்திற்கு கிடைக்காமல் இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தலைப்பாக 'நீதிக்கான நீண்ட பயணம்' என்ற விடயம் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதில் மிக முக்கியமாக சர்வதேச நீதி கோரிக்கை முன்வைக்கப்படவிருக்கின்றது.
தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை வெளிக்கொணரவும், சர்வதேச ரீதியிலான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இந்த மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்படவிருக்கின்றது. அதேபோன்று பல வருடங்களாக தொடரும் போராட்டத்தின் வரலாற்று சான்றுகள், புகைப்படக் காட்சி மற்றும் ஆவண வெளியீடுகள் மூலமாக சர்வதேசத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் இந்த காணாமல் போனோர் விவகாரத்திற்கு சரியான ஒரு பதில் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படுவது மிக அவசியமாகும். மக்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கைகளுக்கு இதுவரை பதில் கிடைத்ததாக தெரியவில்லை.
மக்கள் கடந்த 17 வருடங்களாக போராடி, ஆர்ப்பாட்டம் நடத்தி ஒரு விரக்தி நிலைக்கு சென்றுவிட்டார்கள். இதுவரையும் அவர்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படாமல் இருக்கின்றது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
யுத்தமொன்று நடைபெற்ற நாட்டில் என்ன நடந்தது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படுவது மிக அவசியமாகும். அது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் 2010ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டது. அந்த ஆணைக்குழு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் சாட்சி அமர்வுகளை நடத்தியபோது பலர் அதில் சாட்சியம் வழங்கும்போது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின்னர் அந்த கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவும் வடக்கு, கிழக்கு முழுவதும் விசாரணை அமர்வுகளை நடத்தியது.
அந்த ஆணைக்குழுவுக்கு கிட்டத்தட்ட 19,000 எழுத்துமூல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அந்த எழுத்துமூல முறைப்பாடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. அதேபோன்று 2016ஆம் ஆண்டளவில் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் என்பன உருவாக்கப்பட்டன. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த 9 தீர்மானங்களிலும் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை வெளிப்படுத்துமாறு தொடர்ச்சியாக ஏற்பாடுகள், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கையில் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மனித உரிமை தொடர்பான பல அறிக்கையாளர்களும் இது தொடர்பாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு பல கோணங்களில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டாலும், இன்னமும் காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பதில் கிடைக்காத ஒரு சூழலே இங்கு நிலவிக்கொண்டிருக்கிறது.
அரசாங்கம் இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி, சர்வதேச பங்களிப்புடன் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வெளிப்படுத்த வேண்டும், உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
அந்த வகையிலேயே கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில், காணாமல் போனோரின் உறவுகளை அடக்கி ஒடுக்கிய ஒரு சம்பவத்தை பார்க்க முடிந்தது. இதுவும் காணாமல் போனோரின் உறவுகளை மேலும் காயப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பல கண்டனங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. எப்படி இருப்பினும் இந்த விடயம் தொடர்ந்து இப்படி நீடித்துக்கொண்டிருக்க முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது அவர்களது உறவுகளுக்கு தெரியப்படுத்தப்படுவது அவசியமாகும்.
தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பது கூட தெரியாமல் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தினந்தோறும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்கள் தமது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.
அதனால் இந்த விடயத்தில் தொடர்ந்து இப்படி இழுத்தடிப்பு செய்துகொண்டிருக்காமல், ஒரு சர்வதேச பொறிமுறையை உள்ளடக்கி ஒரு விசாரணை செயற்பாட்டை மேற்கொண்டு, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உள்நாட்டு பொறிமுறையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக தமது விருப்பத்தை வெளியிடாமல் இருக்கின்றார்கள். உள்நாட்டு பொறிமுறையில் தமக்கு நீதி கிடைக்காது என்பதே அந்த மக்களின் வாதமாக இருக்கிறது.
எனவே அந்த மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க, சர்வதேச பங்களிப்புடன் கூடிய ஒரு விசாரணையை நடத்த சகலரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். இதன் ஊடாக காணாமல் போனாரின் உறவுகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM