ஒரு தொகை வல்லப்பட்டைகளை சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் எப்.இசட் 551 என்ற விமானத்தில் டுபாய் நோக்கி புறப்படுவதற்காக வந்திருந்த இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார். 

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 39, 41 வயதான இவர்களின் பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த வல்லப்பட்டைகள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் பயணப் பொதியில் 18,84,000 பெறுமதியான 157 தொலைபேசிகளும், 9 இலட்சம் பெறுமதியான 15 கிலோ கிராம் வல்லப்பட்டைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.