ஊக்க மருந்துச் சோதனை முடிவுகளில் இருந்து தந்திரமாகத் தப்பித்ததாக தன்னை விமர்சித்த பிரான்சின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஸலின் பெச்சிலோ மீது, பிரபல டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதாகத் தனது புகாரில் தெரிவித்திருக்கும் நடால், அதற்கு நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் யூரோக்களை ரொஸலின் அளிக்க வேண்டும் என நடால் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் (13) பாரிஸ் நீதிமன்றில் நடைபெற்றது. நடாலோ அல்லது ரொஸலினோ நீதிமன்றுக்கு சமுகமளித்திராத நிலையில், ரொஸலினின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு நடாலின் தற்போதைய மற்றும் எதிர்கால அனுசரணையாளர்கள் விடயத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நடால் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிரான்சின் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ரொஸலின் பெச்சிலோ என்ற பெண். கடந்த ஆண்டு தொலைக்காட்சியொன்றில் பேட்டியளித்த இவர், ரஃபேல் நடால் குறித்துப் பேசியிருந்தார்.

அதில், 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடால் முழங்கால் உபாதை காரணமாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்து வந்ததைச் சுட்டிக் காட்டியிருந்த ரொஸலின், ஊக்க மருந்துச் சோதனையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே முழங்கால் உபாதை என்று நடால் பொய்க் காரணம் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.