நுவரெலியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் மக்கள் வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் நேற்று முன்தினம் (13) ஆரம்பித்த மழை சிறு சிறு இடைவெளிகளுடன் தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது.

இந்நிலையில், நேற்று (14) மாலை வேளையில் பெய்த கடும் மழையினால் அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டப் பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதி விவசாயக் காணிகள் நீரில்  மூழ்கின. இதனால், காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டன.

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான பாதையில் உள்ள மண்மேடுகளில் இருந்து கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்துடனும், அவதானத்துடனுமே அப்பாதையின் ஊடாகப் போக்குவரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த மத்திய நிலைய அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.