“மக்களை இணைக்கும் பாலமாக மொழிகள் இருக்க வேண்டுமே தவிர, மக்களைப் பிரிக்கும் கருவியாக இருக்கக்கூடாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில், நேற்று (14) நடைபெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று சிலர் மக்களிடையே பேதமையை உருவாக்கும் கருவியாக மொழியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், மனிதாபிமானம் உள்ள எவரும் அனைத்து மொழிகளையும் மதிப்பதுடன் அவற்றைக் கற்றுக்கொள்ளவும் முன்வர வேண்டும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முன்னொரு காலத்தில் பல்லினத்தவரும் தத்தமது இன, சமய, மொழி பேதத்தைத் தாண்டி மக்கள் நெருங்கிப் பழகிவந்ததை நினைவுபடுத்திய ஜனாதிபதி, எல்லா இனத்தவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்வை ஏற்படுத்த முனையும் தற்போதைய அரசின் பயணத்தை, மனிதாபிமானம் அற்ற சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

“இன, சமய, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உயர் கல்வியறிவை வழங்கி இந்நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வடபகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தனது கருத்துக்களையும் வெளியிட்டார்.

“வடபகுதி கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் கிழங்கு இறக்குமதியைத் தடைசெய்வது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதற்காக உரிய அதிகாரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவுசெய்துள்ளது. அத்துடன், யாழ்ப்பாண விவசாயிகளுக்கான கடன் உதவிகள் குறித்து அரச, தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் பெற்றுத் தரவும் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.”

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.