சாதி மாறிக் காதலித்த குற்றத்துக்காக தமது பதினாறு வயது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை, திருமங்கலம் கீழவானேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (16). இவர், கடந்த ஏழாம் திகதியன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பத்தாம் வகுப்பு பரீட்சையில் தோல்வியடைந்ததாலேயே தமது மகள் தற்கொலை செய்துகொண்டதாக அன்னலட்சுமியின் பெற்றோரான ஞானவேலு-சீதாலட்சுமி தெரிவித்திருந்தனர்.

எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை பொலிஸாரின் சந்தேகத்தைக் கிளப்பவே, அவரது பெற்றோரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்போது, அன்னலட்சுமி கிராமத்தில் பல இளைஞர்களுடன் நெருங்கிப் பழகியதாகவும் அதனால தமது குடும்பத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவுமே பெற்ற மகள் என்றும் பாராமல் அன்னலட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறெனினும், அன்னலட்சுமிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாகவும், இதைத் தாங்கிக்கொள்ள முடியாததாலேயே அவரது பெற்றோர் அவரைக் கொலை செய்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.