பாலிவுட் திரையுலகில் பலரின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

நடிகை ஹேமமாலினி எதிர் வரும் 16 ஆம் திகதி  தனது 70ஆவது வயதை பூர்த்தி செய்கிறார். தற்போது அமைச்சராகவுள்ள ஹேமமாலினி தனது வாழ்வில் கடந்துவந்த நிகழ்வுகளை எண்ணங்களாக கோர்த்து புத்தகம் எழுதியுள்ளார்.

ஹேமமாலினியின் சுயசரிதை புத்தகத்தை  எதிர் வரும் 16 ஆம் திகதி  நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்டார்டஸ்ட் இதழின் ஆசிரியருமான ராம் கமல் முகர்ஜி வெளியிட உள்ளார்.

இச் சுயசரிதை புத்தகத்தின் முன்னுரையை பிரதமர் நரேந்திர மோடி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் ராம் கமல் முகர்ஜி கூறியதாவது,

"ஹேம மாலினி திரையுலகிற்கு நடிக்கவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை  கௌரவிக்கும் பொருட்டு அவரது சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகம் அனைவரது வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக முன்னுரையை பிரதமர் மோடி தனது கடின வேலைப்பளுவின் மத்தியிலும் எழுதியுள்ளார். எந்நேரமும் நாட்டின் வளர்ச்சியையே குறிக்கோளாக கொண்டு  இடையறாது இயங்கி வரும் பிரதமர் மோடி, எத்துறைக்கும் பாகுபாடு காட்டாது திரைநட்சத்திரத்தின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது" என கூறினார்.

நடிகை ஹேம மாலினி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள அம்மன்குடி கிராமத்தில் பிறந்து பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு திரையுலக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1968 ஆம்   ஆண்டு "ஷப்னோ கா செளடாகர்" படத்தின் மூலம் ஹேம மாலினி பாலிவுட்டில் அறிமுகமானார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக பல காலம் வலம் வந்தார்.

திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியநிலையில் 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து குர்தாஸ்பூர் தொகுதியில் அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த ஹேம மாலினி தற்போது மதுரா தொகுதியின் அமைச்சராக  உள்ளார்.