இங்கிலாந்தின் கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில், இள நிலை பெண் அதிகாரி ஒருவருடன் பாலுறவில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அதிகாரியை பதவி விலகுமாறு சக வீரர்கள் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

‘எச்.எம்.எஸ். விஜிலன்ஸ்’ என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல், வட அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தபோது, கப்பலில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், தமது இள நிலை பெண் அதிகாரிகள் இருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தலைமையகத்துக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இதையடுத்து, குறித்த கப்பல் கரை திரும்பியதும், உறவில் ஈடுபட்ட அந்த உயரதிகாரியான ஸ்டுவர்ட் ஆர்ம்ஸ்ட்ரோங் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளில் ஒருவர் ரெபேக்கா எட்வர்ட்ஸ் என்று அடையாளம் காணப்பட்டார். மற்றொருவர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. 

ஸ்டுவர்ட்டின் வற்புறுத்தலுக்காகவே தான் உறவுக்குச் சம்மதித்ததாக ரெபேக்கா கூறியதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ரெபேக்கா பதவி விலக வேண்டும் என்று சக வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடற்படையில் ஆண் வீரர்களுடன் பெண் வீராங்கனைகள் இணைந்து செயற்படக்கூடாது என்ற விதிமுறை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னரே நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.