யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு பெரும் பதற்றம் நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கை மற்றும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்வர்களுடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது காரில் இருந்து இறங்கிச்சென்று உரையாட முற்படும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை சுற்றி வளைத்தமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறுகின்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் யாழ். இந்துக் கல்லூரிக்கு முன்னால் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, யாழ்.நகரப்பகுதியும் ஏனைய இடங்களிலும் போராட்டங்களை நடத்துவதற்கும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க தடைவிதித்தும் யாழ்ப்பாண பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் தமிழர்களாகிய எங்களை ஏமாற்ற வேண்டாமெனவும் இதுவொரு சின்ன விடயம் என்றும் அவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதியால் இப்போதே கூறமுடியுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஜனாதிபதி அமைதியாக அவர்களின் கோரிக்கையை செவிமடுத்ததுடன் அவர்களுடன் பேசுவதற்கு முற்பட்டபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைவிடாது தமது எதிர்ப்பபை காட்டியதால் ஜனாதிபதி அவ்விடத்திலிருந்து பின்வாங்கிச் சென்றுவிட்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜனாதிபதியிடம் மேற் கூறப்பட்ட கோரிக்கைகளை மீகவும் காட்டமாக தெரிவித்தனர்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.