மெர்சல் படத்தில் விஜய் முதலில் அறிமுகமாகும் காட்சியின் பின்னணி யில் ஒலிக்கும் “ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமகன் வழிதான் இனிமேல் எல்லாமே!” என்ற பாடல் வரிகள் தமிழக அரசியலில் மெர்சலாகியிருக்கின்றது. விஜய்யின் அடுத்த திட்டம் பாய்ச்சல் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு படபடக்கத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. சினிமாவில் விஜய்க்குமே இது முக்கியமான காலகட்டம் தான். 100 கோடியை தாண்டிய பட்ஜெட் பட்டியலில் விஜய்யை முதன்முறையாக இணைத்துள்ளது மெர்சல் படம்.  ஒரு கதாநாயகனுக்கு பெரிய முதலீடே உடல்தான். அதனை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். அந்த வகையில் அப்போ பார்த்த விஜய்தான் இப்பவும் இப்போ பார்க்கும் விஜய்தான் எப்பவும் என்பதுபோன்ற இளமைத் தோற்றத்தில் மெர்சல் ஸ்டில்களில் ஈர்க்கிறார். 

மெர்சல் விஜய்க்கு 61 ஆவது படம். படத்தின் டைட்டில் டிசைனே 61 என்று வருமாறும் ஆங்கில டைட்டிலை தலைகீழாகப் பார்த்தால் விஜய் என்ற எழுத்து தெரியுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெர்சலில் விஜய்க்கு மூன்று முகம் அந்தத் தோற்றங்கள் பற்றி படத்தின் இயக்குநர் அட்லி ரகசியம் காத்தாலும் விஜய்யின் உழைப்பை வானுயரத்துக்கு உயர்த்திப் பேசுகிறார். 

தெறி படத்தில் ஐந்தாறு ஆக் ஷன் பிளாக் இருந்தால் மெர்சலில் 15 ஆக் ஷன் பிளாக் இருக்கிறது. ராஜஸ்தானில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் மூவாயிரம் பேருக்கு மத்தியில் ஒரு சீன் ஷூட் பண்ணிணோம். அப்போ அங்கே 55 டிகிரி வெப்பம் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு நடித்துக்கொடுத்தார் விஜய். என் வாழ்நாளில் இது போன்ற நடிகரை இனி நான் பார்க்கப்போவதேயில்லை. சிலபேர் பற்றி ஆத்மார்த்தமாகச் சொல்லும்போது கண்ணெல்லாம் கலங்கும். நமக்காக, ரசிகர்களுக்காக இப்படி கஷ்டப்படுகிறாரே என்று நினைக்கும்போது என் கண் கலங்கும்.

விஜய் சேர் நினைச்சா மாஸா ஒரு வசனம் பேசிட்டு போயிடலாம். அதுக்குக் கைதட்டல் கிடைக்கும். ஆனால் அதைத்தாண்டி ஏதாவது பண்ணணும் ரசிகர்களைத்திருப்திப்படுத்தியே ஆகணும் என்கிற நினைப்பு அவர் ரத்தத்தில் இருந்து கொண்டே இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று விஜய்யின் டெடிகேஷன் பற்றி சொல்லி நெகிழ்கிறார் இயக்குநர் அட்லீ. இந்தப் புகழ் வார்த்தைகளும் பாராட்டுகளும் விஜய்க்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அப்பா எனக்கு படிப்பு வரல. நடிக்க வர்றேன் என்று விஜய் சொன்னபோது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கே நடிகனாக மகன் ஜெயிப்பாள் என்று நம்பிக்கை இருந்திருக்காது. அன்று விஜய் தன் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருந்ததே இன்று அவரை இளைய தளபதியாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றது. 

மூஞ்சியும் சரியில்லை. நடிப்பும் இல்லை என்ற விமர்சன உளிகள் விஜய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கியது. தனக்கு நன்றாக வந்த நடனத்தில் ஈர்த்து ஈர்த்து ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்தவர். நடிப்பிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இன்று விஜய்யின் புகழ் தமிழ்நாட்டில் பற்றிப் படர்ந்ததற்கு அவரது அயராத உழைப்பும் அசராத நம்பிக்கையுமே காரணம். 

விஜய் எந்த மேடையில் பேசினாலும் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று நன்றி மறவாமல் குறிப்பிடுவார். அட்லீ சொன்னதுபோல் விஜய்யின் மனசுக்குள் இருந்து வருவது ஆத்மார்த்தமான வார்த்தைகளா என்று அலசினால் அது உண்மை என்பது தெரியவரும். 

ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஹிரோவாக இருந்ததிலிருந்தே ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் விஜய். நடிப்பதுடன் நம்ம வேலை முடிந்தது என்று நினைக்கும் ரகம் இல்லை விஜய். அவர் நடிக்கும் படத்தின் புரமோஷன்களில் தவறாமல் கலந்துகொள்கிறார், பேட்டிகள் கொடுக்கிறார்.  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தானும் தமிழனாய்க் கலந்துகொண்டு அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அரியலூர் மாணவி அனிதாவின் வீட்டுக்கே சென்று அனிதாவின் அண்ணன் ஸ்தானத்தில் தரையில் அமர்ந்து துயரங்களைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தார். இப்படி உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்த ஒருபோதும் விஜய் தயங்கியதில்லை. 

ஸ்டார் அந்தஸ்தை மாட்டிக்கொண்டு அலையாமல் அவ்வப்போது சமூகப் பங்களிப்பில் எளிமையாக ஈடுபடுத்திக்கொள்வது விஜய்யின் இயல்பாகிவிட்டது. இந்த இயல்பும் உணர்வும் விஜய்யை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் இல்லை. 

சமீபத்தில் நடந்த மெர்சல் படப் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது அரங்கமே அதிர்ந்தது. அடுத்துப்பேச வந்த எஸ்.ஜே.சூர்யா,  ஆளப்போறான் தமிழன் பாட்டு வரிகள் உண்மையாக வேண்டும். விஜய்சார் பேசும்போது இங்கு கூடியிருப்பவர்களிடம் பெரிய எனர்ஜியைப் பார்க்க முடிந்தது. இந்த எனர்ஜி வீணாகிவிடக்கூடாது என்று சொன்னபோது மீண்டும் அதிர்ந்தது அரங்கம். 

எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படிப் பேசினீர்கள் என்று எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது அணையைத் திறந்ததும் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் ஒரு எனர்ஜி. தண்ணீர் விவசாயத்துக்குத்தான். ஆனாலும் அதிலிருந்து மின்சாரம் எடுப்பதில்லையா-? அது மாதிரி விஜய்க்குச் சினிமாவும் இருக்கட்டும். அதில் கிடைக்கும் புகழ் நல்ல பெயர் போன்ற எனர்ஜி நல்ல விஷயத்துக்கும் பயன்படட்டும் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். நான் பார்த்தவகையில் 25 வருடமாக சின்சியாரிட்டியும் நல்ல மனசும் மாறாத மனிதராக விஜய் இருக்கிறார். அதில் நடிப்பு இல்லை. இருபத்தைந்து வருடங்களாக ஒருவர் நல்லவராக நடித்துக்கொண்டிருக்க முடியாது என்றார். 

விஜய் அரசியலுக்கு வரணும் என்று சொல்றீங்களா? என்று கேட்டதற்கு,

அரசியலுக்கு வருபவர்களுக்குச் சின்சியாரிட்டி இருக்கணும். என்ன அந்த சின்சியாரிட்டி என்னவென்று கேட்டால் சொன்னா சொன்ன நேரத்துக்கு வரணும். சொன்னதைச் செய்யணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணம் இருக்கணும். வலிகள் வரும்போது தாங்கிக்கொண்டு அதையும் தாண்டி வளரணும் என்கிற நம்பிக்கை இருக்கணும் இது எல்லாமே விஜய்யிடம் இருக்கு. 

நான் அரசியல் பேச வரல நாளைக்கே வாங்க. நாளைக்கே மாநாடு நடத்துங்க ஊர்வலம் போங்கன்னு சொல்லல. அவர் மூலமாக நல்ல விஷயம் நடக்கணும் என்று தோணிச்சு பேசினேன். விஜய்க்காக எழும் குரல்களின் ஒலி ஏன் நல்ல விஷயமாக மாறக்கூடாது. என்ற கேள்வியுடன் முடித்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுடன் வெளிவரும் மெர்சல் படம் என்ன கதை? அரசியல் இருக்கிறதா? என்று இயக்குநர் அட்லீயிடம் கேட்டபோது, 20 வருடங்களுக்கு முன்பு உப்பையும் அடுப்புக் கரியையும் வச்சுப் பல் துலக்கினோம். இன்றைக்கு வரும் விளம்பரங்கள் உன் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா கரி இருக்கான்னு கேட்குது. ஆரம்பக் காலங்களில் நாம் எப்படியிருந்தோம், இடைப்பட்ட காலத்தில் எப்படி இருந்தோம். இப்போது என்னனென்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதைப்பற்றிய கதைதான் மெர்சல் என்றார். 

விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜி அவருக்குள் அரசியல் ஆர்வத்தை எப்போதோ விதைத்திருக்கலாம். இனி அது முளைக்கலாம். இது எல்லாவற்றுக்குமான பதில் விஜய்யின் நெஞ்சுக்குள்ளேயே கூடுகட்டிக்கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.