நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த இருவரை பொலிஸார் ஹட்டன் வில்பிரட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் வில்பிரட்புர பகுதியில் வீடு ஒன்றில் கழிவு தேயிலையுடன், நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

குறித்த இடத்தில் நீண்டகாலமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலைகளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை, இந்த இடத்திலிருந்து 297 கிலோ கழிவு தேயிலை தூளுடன், தேயிலை தூளை சளிப்பதற்கு பயன்படுத்திய சல்லடை வகைகள், பொதி செய்யும் பொதிகள், அறைப்பதற்கு பயன்படுத்திய இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்த கலப்பட நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த உரிமையாளர் ஹட்டன் வில்பிரட்புர பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இருவரையும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17.10.2017) ஹட்டன் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.