டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்ற போதே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யினால் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்களை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடவுள்ளன. 

டெஸ்ட் லீக் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்தும், ஒருநாள் லீக் தொடர் 2020 ஆம் ஆண்டிலிருந்தும் ஆரம்பமாகவுள்ளது.டெஸ்ட் லீக்கில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். குறிப்பாக, சொந்த மண்ணில் 3 தொடர்களும், அந்நிய மண்ணில் 3 தொடர்களிலும் விளையாட வேண்டும். டெஸ்ட் லீக்கில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2021 இல் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.


இதேவேளை, ஒருநாள் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 8 தொடர்களில் விளையாட வேண்டும். இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றிருக்க வேண்டும். இதன் புள்ளிகளின் அடிப்படையில் 2023 - 2024 ம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கான அணிகள் தெரிவு செய்யப்படும்.

இந்நிலையில், பரீட்சார்த்த முறையில் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன் பகலிரவு டெஸ்ட் தொடர் நடத்தவும் ஆலோசனையும் இடம்பெற்று வருகின்றது. 


வெற்றியாளர் கிண்ணம் மற்றும் இருபதுக்கு - 20 ஓவர் உலகக்கிண்ணம் போன்ற தொடர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.